`ரெய்டுக்குப் பயந்து வேடிக்கை பார்க்கிறார்' - முதல்வர் பழனிசாமியைச் சாடும் தினகரன்

தினகரன்

``எங்கள் அமைப்பை ஒடுக்க பார்க்கும் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, எங்க கட்சித் தலைமையகத்தில் வைத்துள்ளோம். நாங்க ஆட்சிக்கு வந்தபிறகு, அவர்களைப் பார்த்துக்கொள்வோம்" என்று அதிரடியாகப் பேசி அதிகாரிகளை மிரள வைத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறார் டி.டி.வி.தினகரன். அந்த வகையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார், அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளரும் கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில்பாலாஜி. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டி.டி.வி.தினகரன், "இந்த அமைப்பைத் தொடங்கிய பின் நாம் நடத்தும் முதல் போராட்டமே  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடத்தும் போராட்டம்தான். இரும்புப் பெண்மணியாக இருந்து நம்மையும் கட்சியையும் வழிநடத்திய ஜெயலலிதா வழியில் நின்று போராட்டத்தை நடத்தி வருகிறோம். காவிரி பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. எடுபிடி எடப்பாடி அரசும் ஒன்றும் செய்யவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியும் அதைக் காலம் கடந்தும் இன்னும் மத்திய அரசு அமைக்கவில்லை. துரோக, எடுபிடி எடப்பாடி அரசு அதற்கு எதிராக எந்தச் சட்டப் போராட்டத்தையும் நடத்தவில்லை. மாறாக, எங்கள் அமைப்பு கரூர் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த முயன்றபோது, அதற்கு எதிராக உயர் நீதிமன்றம் போய் தடை வாங்கியிருக்கிறது. நாங்கள் பொதுக்கூட்டம் நடத்த கூடாது என்று நீதிமன்றம் சென்றவர்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராகக் கோர்ட்டுக்குப் போகவில்லை. அப்படி போக பயந்தும் எங்கே ரெய்டு நடந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கியும் வேடிக்கை பார்க்கின்றனர்.

தினகரன்

அதேபோல், கொரில்லா தாக்குதல்போல் இரவோடு இரவாக இந்த அரசு அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தி, மக்களுக்கு கொடுமை செய்திருக்கிறது. இங்குள்ள போக்குவரத்துத்துறை அமைச்சரை அடுத்த தடவை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். அதேபோல், மேற்கு மாவட்டங்களில் எங்கள் தரப்பு பொதுக்கூட்டங்கள் நடத்த முயன்றால், உடனே காவல்துறையும் வருவாய்த்துறையும் கோர்ட் வரை போய் கூட்டம் நடத்த தடை வாங்குகிறது. நிர்வாகிகள்மீது வழக்கு போடுகிறார்கள். இந்தக் கூட்டத்துக்கு வந்த தொண்டர்களைக்கூட ஐந்து கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தி, ஏதோ தீவிரவாதிகளைச் சோதனைப் போடுவதைப்போல சோதனையிட்டு அலைக்கழித்திருக்கிறார்கள். அப்படி நியாயமாக நடக்காமல் எங்கள் அமைப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் அதிகாரிகள் யார், அவர்கள் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என்ற தகவல்களைச் சேகரித்து எங்க தலைமை கழகத்தில் வைத்துள்ளோம். நாங்க ஆட்சிக்கு வரும்போது அவர்களைப் பார்த்துக்கொள்வோம். இதை நான் மிரட்டலாகச் சொல்லவில்லை. சட்டப்படி அவர்களை கோர்ட் படியேற்றி, அவர்கள் செய்த தவற்றை உணர வைப்போம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!