`ஸ்டெர்லைட்டை மூடுவது எங்கள் கையில் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு கைவிரிப்பு

``ஸ்டெர்லைட் ஆலை மூடுவது எங்கள் கையில் இல்லை. பசுமைத் தீர்ப்பாயம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஆணை வாங்கியுள்ளார்கள்" எனச் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கிராம சுயாட்சி இயக்கம் தூய்மை பாரத நாள் விழா நடைபெற்றது. இதில்  செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு தூய்மைப் பணி மற்றும் கலைக்குழு விழிப்பு உணர்வு பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பேராசிரியை நிர்மலாதேவி ஆடியோ வெளியானவுடன் 24 மணி நேரத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆளுநர் இது குறித்து துணைவேந்தரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சரும் துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவுப் பிறப்பித்துள்ளார். போராசிரியை நிர்மலா தேவியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தவறு யார் செய்திருந்தாலும், அரசு ஒருபோதும் மன்னிக்காது. சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்று தரும்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மாவட்ட மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, அரசு ஆய்வு செய்தபின், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடுவது எங்கள் கையில் இல்லை. பசுமைத் தீர்ப்பாயம் மத்தியரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆலை நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றத்தில் ஆணை வாங்கியுள்ளார்கள். அந்த வழிமுறைகளை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆலையின் உரிமத்தை ரத்து செய்துள்ளது ஏமாற்று வேலை என வைகோ கூறியுள்ளது, அபாண்டமான குற்றச்சாட்டு. எல்லாம் தெரிந்து கொண்டே அவர் அரசியலுக்காகப் பேசுகிறார். பொறுப்புள்ள தலைவர்கள் மக்களைத் தூண்டிவிடக் கூடாது. அச்சத்தை ஏற்படுத்தவோ தேவையற்ற பீதியைக் கிளப்பவோ கூடாது. போராடும் மக்களை நான் சந்திக்கத் தயாராக உள்ளேன். மக்களைப் பாதிக்கின்ற விஷயத்தில் அரசு எப்போதும் வேடிக்கை பார்க்காது. படிப்படியாகத்தான் செய்ய முடியும். ஸ்டெர்லைட் ஆலையிடம் பணம் வாங்கிக்கொண்டு அ.தி.மு.க தன்னை கூட்டணியில் வெளியேற்றியதாக வைகோ இன்று குற்றச்சாட்டை அன்று ஏன் அவர் சொல்லவில்லை. அன்று சொல்லியிருந்தால் அது நியாயம். தற்போது கூறுவது ஒரு தலைவருக்கு ஏற்புடையது அல்ல. அவருக்கு ஏதோ ஆகிவிட்டது. அவர் மனநிலையைச் சரி செய்துகொண்டால் நல்லது. வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாகத் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!