வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (18/04/2018)

கடைசி தொடர்பு:19:40 (18/04/2018)

அன்று 2 எம்.பி-க்கள்; இன்று 20 மாநிலங்களில் ஆட்சி - கர்நாடகாவில் பொங்கிய அமித்ஷா

`காவி, இந்துத்துவ பயங்கரவாதம் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி நாட்டை அவமதித்து வருவது காங்கிரஸ் தலைவர்கள்தான்' எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் பா.ஜ.க தலைவர் அமித்ஷா. 

அமித் ஷா

கர்நாடக மாநிலச் சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. `இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும்' என்ற முனைப்பில் பா.ஜ.க தலைவர்கள், கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். தேர்தல் பிரசாரப் பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமித்ஷா, கர்நாடகாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

இன்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ``காவி மற்றும் இந்துத்துவா பயங்கரவாதம் ஆகிய வார்த்தைகளை, காங்கிரஸ் தலைவர்கள்தான் பேசி வந்தனர். இப்படிப் பேசியே நாட்டை அவர்கள் அவமதித்தும் வந்தார்கள். அக்கட்சியின் தலைவர் ராகுல் `பயங்கரவாதத்துக்கு எந்த மதமும் கிடையாது' என்றார். பின்னர், `நாங்கள் அதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தவே இல்லை' எனக் கூறிவிட்டனர். 

கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்கான பதிவுகள் உள்ளன. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, `நாடாளுமன்றத்தில் இரு எம்.பி-க்களை மட்டுமே பா.ஜ.க வைத்துள்ளது' எனப் பேசியிருந்தார். இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக அமர்ந்திருக்கிறோம். அதேபோல், நாடு முழுவதும் 1,600-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-களை வைத்திருக்கிறோம். 20 மாநிலங்களில் எங்கள் ஆட்சிதான் நடந்து வருகிறது’’ என்றார் கொதிப்புடன்.