வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (18/04/2018)

கடைசி தொடர்பு:21:20 (18/04/2018)

கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள் - பக்தர்களின் பாதத்தை பதம் பார்க்கும் கற்கள்..!

ராமேஸ்வரம் கோயில் சன்னிதி வீதியில் புதிய சாலை அமைப்பதற்காக நடந்து வந்த பணிகள் பல நாள்களாக கிடப்பில் கிடந்து வந்தது. இதனால் பக்தர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் தோண்டப்பட்டு கிடக்கும் சாலையினை சுத்தம் செய்யும் போராட்டத்தினை நடத்தினர்.

ராமேஸ்வரம் கோயில் சன்னிதி வீதியில் புதிய சாலை அமைப்பதற்காக நடந்து வந்த பணிகள் பல நாள்களாகக் கிடப்பில் கிடந்து வந்தது. இதனால் பக்தர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதனைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் தோண்டப்பட்டு கிடக்கும் சாலையினை சுத்தம் செய்யும் போராட்டத்தினை நடத்தினர்.

 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் பாதுகாப்பு கருதி 4 ரதவீதிகள் மற்றும் சன்னதி வீதியில் இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடும் வெயிலில் காலில் செருப்பு இன்றி கடும் அவதியுடன் கோயில் ரதவீதி மற்றும் கடற்கரை பகுதிக்குச் சென்று வருகின்றனர். இதனிடையே அக்னி தீர்த்த கரை முதல் கோயிலின் கிழக்கு வாயில் வரையிலான சன்னிதி வீதி பகுதியில் புதிய சாலை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கென ஏற்கெனவே இருந்து வந்த சாலையினை தோண்டி எடுத்த ஒப்பந்தகாரர் புதிய சாலை பணியை மேற்கொள்ளாமலே கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.

கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக பக்தர்கள் பயன்படுத்தும் இந்தப் பிரதான சாலை முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கடலில் குளித்துவிட்டு ஈரத்துடன் கோயிலுக்குத் தீர்த்தமாட வரும் பக்தர்களின் பாதங்களை, தோண்டப்பட்ட சாலையில் கிடந்த கற்கள் பதம்பார்த்து வருகின்றன. இதனால் பல பக்தர்கள் சிதறிக் கிடக்கும் கற்களால் கால் இடறி விழுந்து காயமடைவதும், செருப்பு இன்றி நடந்து வரும் பக்தர்களின் கால்களில் கற்கள் குத்தி காயம் ஏற்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இடையூறுகளைக் களைய புதிய சாலை அமைக்கும் பணியை விரைவில் நிறைவேற்ற கோரியும், சாலையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கற்களைத் தூய்மைப் படுத்தும் வகையிலும் இந்து மக்கள் கட்சியினர் சன்னிதி வீதி சாலையைச் சுத்தம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.