இங்கிலாந்தில் தத்துவஞானி பசவேஸ்வராவின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!

மோடி

Photo: ANI

இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுப் பிரதமர் தெரசா மே-வை இன்று காலை சந்தித்து இரு நாடுகள் உறவு, பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆசோசித்தார். அதைத் தொடர்ந்து, லிங்காயத் மத தத்துவவாதி பசவேஸ்வராவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியதை செலுத்தினார். 

இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 5 நாள் சுற்றுப்பயணமாக ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி கடந்த 16-ம் தேதி புறப்பட்டுச் சென்றார். பயணத்தின் முதற்பகுதியாக ஸ்வீடன் சென்ற அவர், அந்நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் லோஃவென்னைச் சந்தித்தார். அதன்பின், இந்தியா மற்றும் ஸ்வீடன் இடையிலான உறவை மேம்படுத்தும் விதமாக ஸ்வீடன் நாட்டுத் தொழிலதிபர்களுடனான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். 

பசவேஸ்வரா சிலை

Photo: ANI

ஸ்வீடன் பயணத்தை முடித்த நிலையில், இங்கிலாந்து சென்ற மோடி, அந்நாட்டு பிரதமர் தெரசா மே-வை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, விசா நடைமுறைகள், குடியேற்ற விதிமுறைகள், தீவிரவாத எதிர்ப்பில் இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தார். இந்தச் சந்திப்பின் போது தெரேசா மே-விடம், சர்வதேச சோலார் கூட்டமைப்பில் (International Solar Alliance) இங்கிலாந்தின் பங்களிப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மோடி தெரிவித்தார். 

பசவேஸ்வரா சிலை

Photo: ANI

முன்னதாக, சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை லிங்காயத் பிரிவினரை தனி மதமாக அங்கீகரித்து, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர், 12 ம் நூற்றாண்டின் கர்நாடகாவைச் சேர்ந்த லிங்காயத் மத தத்துவஞானி பசவேஸ்வராவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆல்பர்ட் எம்பங்க்மெண்ட் கார்டனில் உள்ள பசவேஸ்வரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!