பாம்பே ஐ.ஐ.டி-யுடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மும்பையில் உள்ள பம்பாய் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து இணைய வழி மென்பொருள்கள் கற்பித்தல் தொடர்பான பயிற்சியைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மும்பையில் உள்ள பம்பாய் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து இணைய வழி மென்பொருள்கள் கற்பித்தல் தொடர்பான பயிற்சியைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர்.

ஒப்பந்தம் கையெழுத்து

தகவல் தொழில்நுட்பம் மூலமாக மாணவர்களுக்கு மென்பொருள் குறித்த பயிற்சியை வழங்கும் திட்டம் ஸ்போக்கன் டுட்டோரியல் ப்ரோகிராம் என அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 87 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் பயனடையும் வகையில் பாம்பே ஐ.ஐ.டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பாஸ்கர், பாம்பே ஐ.ஐ.டி-யின் இணையவழி மென்பொருள் கற்பித்தல் திட்ட இயக்குநர் முகமது காசிம்கான் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இணையவழி மென்பொருள் கற்பித்தல் குழுவானது, நாடுமுழுவதும் 43 லட்சம் மாணவர்களுக்கு இதுவரை பயிற்சி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அக்குழுவானது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் 87 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும். 

இந்தத் திட்டத்தின் மூலமாக லினெக்ஸ், சி, சி++, ஜாவா, லிபெர், ஓபன் ஃபோம், லேடெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு மென்பொருள் குறித்த பயிற்சிகள் தொலைதூர முறையில் அளிக்கப்படுகிறது. வல்லுநர்களின் உதவி எதுவும் இல்லாமல் தானாகவே கற்றுக் கொள்ளும் வகையில் இந்தப் பாடங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் எளிதாக இதனைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாஸ்கரிடம், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த துணைவேந்தர் பாஸ்கர், ``நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் 87 கல்லூரிகளில் 70 சதவிகிதம் பேர் மாணவிகளே பயில்கின்றனர். மாணவர்கள் 30 சதவிகிதம் பேர் மட்டுமே பயில்கின்றனர். இருப்பினும் இந்தப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளிலிருந்து மாணவிகள், பேராசிரியை, பணியாளர்கள் என யாரிடமிருந்தும் இதுவரை எவ்விதமான பாலியல் புகார்களும் வரவில்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தைப் பொறுத்தவரையிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதால் எந்தப் புகாரும் வரவில்லை’’ எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!