வ.உ.சி துறைமுகத்தின் இயக்க விகிதாசாரம் 40.17% அதிகரிப்பு - துறைமுக சேர்மன் அறிக்கை..!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் கடந்த நிதியாண்டை விட, 4.89 சதவிகிதம் குறைந்திருந்தாலும், துறைமுகத்தின் இயக்க விகிதாசாரம், 40.17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

வ உ சி துறைமுகம்

தூத்துக்குடியில் இயங்கி வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின், 2017 -18 ஆண்டுக்கான நிதிநிலை குறித்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. துறைமுக சபை சேர்மன் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின், கடந்த நிதியாண்டின் இயக்க வருவாய், ரூ.622.75 கோடி ஆகும். இதில், வரி பிடித்தம் போக உள்ள நிகர உபரி வருவாய் ரூ.117.88 கோடி. இதனால் துறைமுகத்தின் இயக்க விகிதாசாரம், 40.17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. துறைமுகத்தின் உள்நாட்டு சரக்கு கையாளும் தளத்தை ஆழப்படுத்தும் பணி, ரூ.96.33 கோடி செலவில் பணிகள் முடிந்துள்ளன. 

நிலக்கரிதளம், 1 மற்றும் 2-ஐ மேம்படுத்தும் பணி, பொது மற்றும் தனியார் கூட்டமைப்பின் கீழ் குறைந்த மிதவை ஆழம் கொண்ட கட்டுமான மூலப்பொருள்கள் கையாளும் கப்பல்தளம் அமைக்கும் பணி, இ.பி.சி., முறையில் வடக்கு சரக்கு தளம் - 3 கட்டுமானப் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. 

துறைமுகத்தின் கப்பல் தளங்களை 16.5 மீட்டராகவும், கப்பல்வழி தடத்தை 17.20 மீட்டராகவும் ஆழப்படுத்தும் பணி மற்றும் துறைமுக நுழைவு வாயிலை 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி, கப்பல் தளம் 3 மற்றும் 4 யை மேம்படுத்தும் பணிகள் செயல்படுத்த உள்ளன.

துறைமுகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக, நிலக்காரி சேமிப்புக்கிடங்கில் தண்ணீர் தெளிப்பான் அமைப்பு மற்றும் காற்றுத் தடுப்பான் அமைப்பு, கப்பல் சரக்குத்தளம் 9-ல் நிலக்கரி கையாளுவதை இயந்திரமாக்கல், சரக்கு கையாளும் போது ஏற்படும் தூசியினை குறைப்பதற்காக மின்சாரத்தால் இயங்கக் கூடிய நகரும் ஹாப்பார் அமைப்பு போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைத் திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளது. துறைமுகத்தில் காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்காக சுற்றுப்புறக் காற்று தரம் கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் தண்ணீரை அதிக அழுத்ததுடன் தெளிக்கக் கூடிய தண்ணீர் அடிப்பான் (fogging) அமைப்பும் நிறுவப்பட உள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம், 2017-18-ல் நிதியாண்டில், 365.83 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது, 2016-17 நிதியாண்டில் கையாளப்பட்டதை  விட, 4.89 சதவிகிதம் குறைவு. இறக்குமதியில், 261.71 லட்சம் டன்களும், ஏற்றுமதியில் 104.12 லட்சம் டன்களும் கையாளப்பட்டுள்ளன.

சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில்,கடந்த நிதியாண்டை விட,  8.65 சதவிகிதம் கூடுதலாக, 6,97,631 டி.இ.யுக்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. உள்நாட்டு சரக்குப் பெட்டகங்கள், கடந்த நிதியாண்டை விட, 33.11 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!