`அரசுப் பேருந்தில் கடல் குதிரை கடத்திய இளைஞர்!’ - மடக்கிப் பிடித்த சுங்கத் துறை அதிகாரிகள்

ராமேசுவரத்திலிருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 7 கிலோ கடல்குதிரை சுங்கத்துறை அதிகாரிகளால் ராமநாதபுரத்தில் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக அதனைக் கொண்டு வந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரத்திலிருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 7 கிலோ கடல்குதிரையை ராமநாதபுரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடல் குதிரையைக் கடத்தி வந்த இளைஞர் ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சுங்கத்துறையினரால் கைபற்றப்பட்ட கடல்குதிரை

கடல்வாழ் உயிரினங்களில் அழிந்து வரும் உயிரினங்களான கடல் அட்டை, கடல்குதிரை, கடல் ஆமை, கடல் பசு, திமிங்கிலங்கள், சங்கு வகைகள் போன்றவற்றை மீனவர்கள் பிடிக்கத் தடை அமலிலிருந்து வருகிறது. இருப்பினும், சில மீனவர்கள் இவற்றைப் பிடித்துவந்து சட்டவிரோதமாக, அதிக விலைக்கு விற்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அதிக அளவு கள்ளத்தனமாகப் பிடிக்கப்பட்டு வருவது கடல் அட்டை மற்றும் கடல் குதிரை போன்றவைதான்.

இந்நிலையில் நேற்று இரவு ராமேசுவரத்திலிருந்து திருச்சி செல்லும் அரசுப் பேருந்தில் கடல் குதிரைகளை இளைஞர் ஒருவர் எடுத்துச் செல்வதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அவ்வழியாக வந்த பேருந்துகளை வழிமறித்து சோதனை செய்தனர். இந்தச் சோதனையின் போது ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சேதுநகரைச் சேர்ந்த பக்ருதீன் மகன் மாலிக்(21) என்ற இளைஞர் அரசால் தடை செய்யப்பட்ட  7 கிலோ கடல் குதிரைகளைக் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. கடல் குதிரைகளைப் பறிமுதல் செய்ததுடன் இளைஞர் மாலிக்கையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.அரசால் தடை செய்யப்பட்ட பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகளின் சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் வரை இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!