நீதிமன்ற உத்தரவை மீறும் காவலர்கள் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகரிக்கும் செல்ஃபி மோகம்! | police takes selfies in madurai meenakshi amman temple

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (19/04/2018)

கடைசி தொடர்பு:00:30 (19/04/2018)

நீதிமன்ற உத்தரவை மீறும் காவலர்கள் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகரிக்கும் செல்ஃபி மோகம்!

உயர்நீதிமன்றம் என்ன காரணத்திற்காக தடை உத்தரவு போட்டதோ அதை மீறி செல்போன் மூலம் புகைப்படம் செல்ஃபி எடுக்கும் சம்பவம் நடந்துள்ளது,

நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்துக்குள் காவல் அதிகாரிகள் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோயில்

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்துக்குப் பிறகு கோயிலின் பாதுகாப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் முத்துக்குமார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் இறுதியில் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதில் செல்போன் கொண்டு செல்லக் கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அவ்வுத்தரவு பக்தர்கள் கோவிலில் அமைதியான முறையில் வழிபாடு செய்யவும், எந்த இடையூறும் இருக்கக் கூடாது என்பதாலும் இந்த உத்தரவைப் பிறப்பித்தனர். அதே சமயத்தில் கோவிலில் பணி செய்பவர்கள் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு காவல் அதிகாரிகள் தங்களின் அலுவல் சம்பந்தமாகப் பேசிக்கொள்ள வேண்டும் என்பதால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அலுவலக தகவலுக்காகவும் பயன்படுத்த வேண்டிய கோவில் ஊழியர்களும் காவல்துறையினரும் செல்போன் மூலம் செல்ஃபி எடுப்பது வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். மேலும் அவர்களால் அனுமதிக்கப்பட்டவர்களும் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். உயர்நீதிமன்றம் என்ன காரணத்திற்காக தடை உத்தரவு போட்டதோ அதை மீறி செல்போன் மூலம் செல்ஃபி எடுக்கும் சம்பவம் நடந்துள்ளது. அதே சமயத்தில் செய்தியாளர்களின் செல்போனை உடன் எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் நடவடிக்கைகள் எடுத்தனர். காவல் அதிகாரிகளின் இந்தச் செயல் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.