களைக்கட்டும் சாமந்திப் பூக்களின் அறுவடை -விவசாயிகள் மகிழ்ச்சி!

Marigold Flowers

கொள்ளிடம் ஆற்றின் கரையோரக் கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சாமந்திப் பூக்களின் அறுவடை சீசன் ஆரம்பித்துள்ளது.  பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

சாமந்திப் பூ

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள நல்லூர், நல்லநாயகபுரம், தண்டேசநல்லூர், ஆச்சாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சாமந்திப் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  நான்கு மாதகாலத்தில் அறுவடை செய்யப்படும் சாமந்திப் பூக்களை பயிரிட ஏக்கர் ஒன்றுக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறதாம்.  இங்கு அறுவடை செய்யப்படும் பூக்களைக் கிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்கிறார்கள்.  மல்லிகை, ரோஜா போன்ற பூக்களின் விலை அதிகமாக இருப்பதால் அவற்றைத் தவிர்த்து குறைந்த விலையில் கிடைக்கும் சாமந்திப் பூக்களை பொது மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.  எனவே, மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் நேரில் வந்து சாமந்திப் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.  இதனால், சாமந்திப் பூக்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

இதுபற்றி இப்பகுதி விவசாயிகளிடம் பேசியபோது,  "சாமந்திப் பூக்களை நடவுசெய்த காலம் முதல் வாரம் ஒருமுறை பயிருக்குத் தேவையான மருந்து தெளித்து பராமரித்து வந்தால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இலாபம் கிடைக்கும்.  நஷ்டம் இன்றி இலாபம் கிடைப்பதால் இப்பகுதி விவசாயிகள் இவ்வகை பூக்களைச் சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.  சாமந்திப் பூ விதைகளை வெளியூர் சென்று வாங்கி வருவதில் சிரமம் உள்ளது.  எனவே, இந்தச் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்மைத் துறை மூலம் சாமந்திப் பூ விதைகளை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!