சீர்காழியில் கட்சிக் கொடி கம்பங்கள் உடைப்பு -சாலை மறியல்; பதற்றம்!

புதிதாக அமைக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் உடைக்கப்பட்டதால், பதிலுக்கு தி.மு.க., அ.தி.மு.க. கொடிக் கம்பங்கள் சிதைக்கப்பட்டன. மேலும் தங்களது கொடிக் கம்பம் உடைக்கப்பட்டதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.  

கட்சிக் கொடி கம்பங்கள்

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொண்டல் கிராமத்தின் கடைவீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி சார்பாக புதிதாகக் கொடிக் கம்பம் கொடி அமைக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.  இந்நிலையில், நேற்று முந்தினம் இரவு அந்தக் கொடிக் கம்பத்தை மர்ம நபர்கள் சிலர் உடைத்துள்ளனர்.  இதனால் வெகுண்டெழுந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் தங்களது கொடிக் கம்பத்தின் அருகில் இருந்த அ.தி.மு.க., தி.மு.க. கொடிக் கம்பங்களை உடைத்துவிட்டனர்.  இப்பிரச்சனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதனை அடுத்து கொடிக் கம்பம் உடைக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் சீர்காழி-பனங்காட்டாங்குடி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.  

Party flag 2

 சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் துறையினர் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "நீங்கள் கொடிக் கம்பத்தை உடைத்தவர்கள் மீது புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை நாங்கள் எடுக்கிறோம்" என்று போலீசார் உறுதியளித்தனர்.  அதனை ஏற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடிக் கம்பத்தை இடித்ததாக 7 பேர் மீது புகார் அளித்தனர். இந்த 7 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உத்தரவாதம் தந்ததால் சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.  என்றாலும், தி.மு.க., அ.தி.மு.க. கொடிக் கம்பங்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியினர் கூறுவதால் மீண்டும் அங்கு பதற்றம் நிலவுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!