வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (19/04/2018)

கடைசி தொடர்பு:06:13 (19/04/2018)

சேலம் மாவட்டம் முழுவதும் ஹெச்.ராஜா உருவபொம்மை எரித்து தி.மு.க-வினர் போராட்டம்!

ஹெச். ராஜா உருவபொம்மை எரிப்பு

தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து சேலம் தி.மு.க.,வினர், மாவட்டம் முழுவதும் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் .

சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள அண்ணா சிலை முன்பு மாநகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரிக்கப்பட்டது. சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் தி.மு.க., பகுதி கழக செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

அம்மாப்பேட்டை, பொன்னம்மாப்பேட்டை  பகுதிகளில் கேபிள் ராஜா தலைமையில் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தாதகாப்பட்டி பகுதியில் செயலாளர் சரவணன் தலைமையில் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே உள்ள பெரியார் சிலை முன்பு மாநகர தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் கேபிள் சரவணன் தலைமையில் ஹெச்.ராஜா உருவ பொம்மை எரிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இது தவிர மகுடஞ்சாவடி, ஆத்தூர், சங்ககிரி போன்ற சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஹெச். ராஜா உருவ பொம்மைகள் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

இதுபற்றி சேலம் மாநகர செயலாளர் ஜெயக்குமார், ``ஹெச்.ராஜா தொடர்ந்து தமிழ் மக்களையும், பெண்களையும் இழிவுப்படுத்திப் பேசி வருகிறார். இதற்கு முன்பு தலைவர் கலைஞரையும், ஸ்டாலினையும் விமர்சித்துப் பேசினார். ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பாமர மக்களைப் போல பேசி வருவது வெட்கக் கேடானது. இதனால் தி.மு.க., தொண்டர்கள் மனம் புண்பட்டு உள்ளது. தி.மு.க., அறவழியில் போராடும்'' என்றார்.