``போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் நடமாட முடியுமா?” - ஹெச்.ராஜாவுக்கு ஆ.ராசா சவால்! | A raja, challenged BJP's H. raja to come without any security

வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (19/04/2018)

கடைசி தொடர்பு:10:07 (19/04/2018)

``போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் நடமாட முடியுமா?” - ஹெச்.ராஜாவுக்கு ஆ.ராசா சவால்!

ஆ ராசா கோவை பொதுக்கூட்டம்

" 'நீ, தைரியமான, ஆறு அறிவுள்ள மனிதன்தான் என்று சொன்னால், போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் செல் பார்க்கலாம்' என்று ஹெச்.ராஜாவுக்கு கோவையில் சவால் விடுத்துள்ளார் ஆ.ராசா.

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் ஈரோடு மண்டல மாநாட்டின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் கோவையில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, "காவிரி விவகாரத்தில் தி.மு.க துரோகம் செய்துவிட்டது என அ.தி.மு.க-வினர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் உண்மை என்ன? இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி-யைப் பெற்றுத்தந்தவர் கலைஞர்தான். நாங்கள் போராடி 205 டி.எம்.சியைப் பெற்றுதந்த பிறகு, அதை அரசிதழில் வெளியிடவைத்தார்கள். அதெல்லாம் ஒரு சாதனையா? அரசிதழில் வெளியாவது என்பது  ஒரு சடங்கு அவ்வளவுதான். அதைப் பெரிதுபடுத்தி, தஞ்சையில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி 'பொன்னியின் செல்வி' என்று ஜெயலலிதாவுக்குப் பட்டம் கொடுத்தார்கள். பொன்னியின் செல்வி என்று சொன்னீர்களே அது உண்மையென்றால், இப்போது காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டுமல்லவா? காவிரிக்காக ஜெயலலிதா ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.

இங்கு நடப்பதெல்லாம் ஒரு ஆட்சியா? இவர்களையெல்லாம் யார் மதிக்கிறார்கள். நாங்கள் பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்கள் எங்களை மதிக்கிறார்கள். நான் இப்போது பதவியில் இல்லை. ஆனாலும், என்னைப் பார்த்தா மந்திரி போறாருப்பான்னு சொல்கிறார்கள். ஆனால், எடப்பாடியைப் பார்த்தால் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? புளி மூட்டை போகுதுபார்'னு சொல்கிறார்கள். பதவியில் இருக்கும்போதே இப்டினா, பதவி போயிருச்சுனா ஒருத்தரும் உங்களை மதிக்க மாட்டார்கள். 47 கோடி ரூபாய் செலவழித்து ஜெயலலிதாவுக்கு  மணிமண்டபம் கட்டப்போகிறார்களாம். நான் கேட்கிறேன், அந்த மணிமண்டபத்தில் என்ன எழுதுவீர்கள்? சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில், 'அரசியல் சட்டத்தைப் படுகொலை செய்யும் செயலைச் செய்திருக்கிறார் ஜெயலலிதா' என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது நினைவிருக்கிறதா? அரசியல் சட்டத்தைப் படுகொலை செய்த எங்கள் அம்மா உறங்குகிறார் என்று எழுதுங்கள் பார்க்கலாம் என்றவர்,

இந்து மதம், இந்து நாடு என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஹெச்.ராஜாவே, நீ தைரியமான, ஆறு அறிவுள்ள மனிதன்தான் என்றால்,  போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வந்து செல், பார்க்கலாம். என்மீது  2ஜி வழக்கு இருக்கும்போதுகூட நான் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் பொதுக் கூட்டங்களுக்கெல்லாம் சென்றுவந்தேன். எங்கே, அதேபோல நீ வா பார்க்கலாம்'' என்று ஹெச்.ராஜாவுக்கு சவால் விட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை