வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (19/04/2018)

கடைசி தொடர்பு:08:28 (19/04/2018)

தேனியில் தொடங்கியது சித்திரைத் திருவிழா – வீரபாண்டி கோயிலில் திருவிழாக் கம்பம் நடப்பட்டது!

வீரபாண்டி கோவிலில் திருவிழாக் கம்பம் நடப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வீரபாண்டி கெளமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் தொடக்கமாக, நேற்று (18/04/2018) கம்பம் நடுதல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா, எட்டு நாள்கள் நடைபெறும். இந்த ஆண்டு, வரும் மே 8 -ம் தேதி முதல் 15 -ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக நேற்று கோயிலில் கம்பம் நடும் விழா நடத்தப்பட்டது. இந்தக் கம்பம், உத்தமபாளையம் முல்லைப்பெரியாறு ஆற்றின் கரையில் இருந்த அத்தி மரத்தில் செய்யப்பட்டது. இன்று முதல் 22 நாள்களுக்கு கம்பத்திற்கு சிறப்பு பூஜை நடைபெறும். தினந்தோறும் மாலை, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன், மண்டகப்படிகளுக்கு வந்து, பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார். இதற்கான ஏற்பாடுகளை உபயதாரர்கள் மேற்கொள்வார்கள்.

தேனி கோயில் திருவிழா

இன்று காப்பு கட்டும் பக்தர்கள், திருவிழாவின்போது தீச்சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அங்கபிரதட்சணம், மாவிளக்கு ஏற்றுதல், கண்மலர் செலுத்துதல், அலகு குத்துதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்துவர். நடைபெற இருக்கும் எட்டு நாள் திருவிழாவுக்காக நேற்று முதலே தயாராகத் தொடங்கிவிட்டனர் தேனி மாவட்ட மக்கள். திருவிழாவுக்கு தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர்.