வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (19/04/2018)

கடைசி தொடர்பு:08:07 (19/04/2018)

நிர்மலா தேவிக்கு எதிராக திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை விவகாரம் தொடர்பாக, திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெண் வழக்கறிஞர்கள்

மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 12 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவிக்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

மகளிர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் நிர்மலாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துவருகின்றன. இந்த விவகாரத்தில், நடந்த உண்மையை உலக்குக்குத் தெரியப்படுத்த, உண்மையான குற்றவாளிகளை கண்டறிய, சி.பி.ஐ விசாரணை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் பெண் வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திருச்சி வழக்கறிஞர் பானுமதி தலைமையில் திரண்டு நீதிமன்றத்துக்கு வெளியே வந்த வழக்கறிஞர்கள், தனியார் கல்லூரி மாணவிகளைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்த முயன்ற பேராசிரியை மீதான குற்றத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கக் கோரியும், இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி கிரிமினல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரகுமார், வழக்கறிஞர் கமருதீன்  உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தால் திருச்சி நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க