``இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர் | "Tamil Nadu goes to the barbarous age" - S. Ve. Shekher Prediction

வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (19/04/2018)

கடைசி தொடர்பு:14:23 (19/04/2018)

``இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்

``இப்படியே போனால்.... குழந்தையைக்கூட கொஞ்ச முடியாது'' - எஸ்.வி.சேகர்

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்புகள் கூடிக்கொண்டே போகின்றன. இந்த ஆடியோவில் ஆளுநர் பெயரும் அடிபட்டதையடுத்து, அரசியல் கட்சிகள் `ஆளுநர் பதவி விலக வேண்டும்' என கோரிக்கை எழுப்பினர். சமூக வலைதளங்களிலோ ஆளுநரை மோசமாக சித்திரித்து கருத்துகள் பரிமாறப்பட்டு வந்தன. இந்நிலையில், இவ்விவகாரத்துக்குப் பதில் கொடுக்கும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சிக்கு ஆளுநரே ஏற்பாடு செய்திருந்தார். அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆளுநரே நேரடியாக பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியிருப்பதும் இப்போது ஆச்சர்ய அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

மேலும் இந்நிகழ்வில், பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் ஆளுநர் தன் கையால் தட்டிக்கொடுத்த விவகாரம் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, ஆளுநரும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தன் செய்கைக்கு மன்னிப்பு கோரியுள்ளார். தொடர்ச்சியான இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, 'ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும்' என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சிகளிடையே எழ ஆரம்பித்துள்ளது. 
இந்நிலையில், ஆளுநர் நடத்தியுள்ள பத்திரிகையாளர் சந்திப்பு நடைமுறைகள் குறித்து தமிழக அரசியல் கட்சியினரிடையே கருத்து கேட்டோம்...

ஆளுநர்

மா.சுப்பிரமணியன் - தி.மு.க (முன்னாள் மேயர்)

``பத்திரிகையாளர் சந்திப்பு என்பது இதுவரையிலும் எந்தக் கவர்னரும் செய்யாத வேலை. 'என்மீதே குற்றச்சாட்டு கூறப்படுவதால், சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கட்டும். நான் எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்கத் தயார்' என்று நேர்மையாக பத்திரிகை அறிவிப்பை மட்டும் கொடுத்துவிட்டுப் போயிருக்கலாம். இப்படி அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்திருக்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை. 
இந்தப் புகார் குறித்து விசாரிக்க துணைவேந்தரே, ஐவர் குழு அமைத்திருக்கும் சூழலில், ஆளுநரும் அவசரமாக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை விசாரணைக்காக நியமித்திருப்பது அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.''

அமைச்சர் கே.பி.அன்பழகன் - அ.தி.மு.க.(உயர் கல்வித்துறை அமைச்சர்)

``இந்த விஷயம் சம்பந்தமாக ஆளுநரே பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டு பேட்டி கொடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதே என் கருத்து''

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் - காங்கிரஸ் (தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்) 

``அவசரம் அவசரமாக ஆளுநரே இவ்விஷயத்தில் தலையிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்திருப்பது, விசாரணைக் கமிஷன் அமைத்திருப்பது ஆகியவை சந்தேகத்துக்கு உரியது. சம்பவம் பற்றிய தகவல் வெளிவந்த மூன்றாவது நாளிலேயே ஆளுநர் இவ்வளவு விரைவாகச் செயல்படுவதுதான் இந்த சந்தேகத்துக்குக் காரணம். எனவே, இந்த விஷயத்தில் உள்ள மர்மங்களைப் பார்த்தால், ஏதோ ஒருவகையில் ஆளுநருக்கும் இவ்விஷயத்தில் சம்பந்தம் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.''

எஸ்.வி.சேகர் (பி.ஜே.பி ஆதரவாளர்)

`` 'கவர்னர் என்பவர் வயசானவர்; வெறுமனே ஒரு ரூம்ல உட்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கலாம். அதைத்தவிர வேறெதுக்கும் அவர் வரக்கூடாது' என்பதுமாதிரியான ஒரு மனோபாவம் திராவிட அரசியலில் ஊறிப்போயிருக்கிறது. அதனால்தான் இப்படியெல்லாம் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுடைய பணத்தை திருடிக் கொண்டிருப்பவர்களுக்கு பயம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் ஆளுநர் ஆய்வைக்கூட குற்றம் சொல்கிறார்கள். 

ஆளுநர்

`பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை எட்டிப் பார்த்தார்' என்று ஏற்கெனவே, ஒரு புரளி கிளப்பினார்கள். அப்புறம் அந்தப் பொண்ணே, 'அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. இது என்னை அசிங்கப்படுத்தும் முயற்சி' என்று பேட்டி கொடுத்தார்.
ஜெயலலிதா அஞ்சலியின்போது சசிகலாவின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார் மோடி. இதே அவர் சசிகலாவைப் பார்த்துக் கும்பிட்டிருந்தால், 'கைகுலுக்காமல், கும்பிடுகிறீர்களே?' எனத் திரி கிள்ளியிருப்பார்கள். இப்போதும் பத்திரிகையாளர் சந்திப்பில் நடைபெற்ற ஒரு சாதாரண நிகழ்வைக் குற்றம் சொல்கிறார்கள். இப்படியே போனால், ஒரு கல்யாண வீட்டில் குழந்தையை எடுத்துக்கூட கொஞ்சமுடியாது. இதையெல்லாம் பார்க்கும்போது, மறுபடியும் தமிழகம் காட்டுமிராண்டிக் காலத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது' என்றே நினைக்கத் தோன்றுகிறது.''

முத்தரசன் - இந்தியக் கம்யூனிஸ்ட் (மாநிலச் செயலாளர்)

''பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதென்பது, ஆளுநரின் வேலையல்ல. அதுவும் கவர்னர் மாளிகையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இதுபோல் எந்த ஆளுநரும் நடந்துகொண்டதாக முன்னுதாரணமும் இல்லை. இந்த விஷயத்தில் இவர் இவ்வளவுதூரம் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை... அப்படி பதற்றப்படுகிறார் என்றால், அதன் காரணம் என்னவென்றும் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆய்வு மேற்கொள்வது, பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, துணைவேந்தர் நியமன விஷயத்தில் தன் விருப்பப்படி நடந்துகொள்வது போன்றவையெல்லாம்  'தனக்குத்தான் அதிகாரம் உள்ளது' என்பதை அவர் உணர்த்துவதாகவே உள்ளது.'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்