வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (19/04/2018)

கடைசி தொடர்பு:11:08 (19/04/2018)

ஆர்.எஸ்.பாரதியை தி.மு.க கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்! தமிழிசை

தி.மு.க எம்.பி. கனிமொழி குறித்து சர்ச்சைக் கருத்து பதிவிட்ட ஹெச்.ராஜாவுக்கு மறைமுகமாக தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா, நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்தும், கனிமொழி குறித்தும் தரக்குறைவான கருத்தைப் பதிவிட்டிருந்தார். இது, தி.மு.க-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஹெச்.ராஜாவைக் கண்டித்து பல்வேறு இடங்களில் பல போராட்டங்களும், உருவ பொம்மை எரிப்பு சம்பவங்களும் நடைபெற்றன. மேலும், பல தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஹெச்.ராஜாவின் கருத்துக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள், எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத்தருகிறது'' என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஹெச்.ராஜாவின் ட்விட்டர் கருத்தைக் கண்டித்து, தி.மு.க எம்.பி., ஆர்.எஸ் பாரதி, ஹெச்.ராசாவை மிகவும் கடுமையான முறையில் விமர்சித்திருந்தார். இவரின் கருத்துக்கும் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழக அரசியல், நாகரிகமாக எடுத்துச்செல்லப்பட வேண்டும் என நினைக்கிறேன். எதிர்ப்பு தெரிவிப்பதும் கண்ணியமாக இருக்க வேண்டும்.  ஆர்.எஸ்.பாரதியின் கடிதம், ``தாய்மையைக் கொச்சைப்படுத்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தி.மு.க இதைக் கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசியல், நாகரிகமாக எடுத்துச்செல்லப்பட வேண்டும் என நினைக்கிறேன்.எதிர்ப்பு தெரிவிப்பதும் கண்ணியமாக இருக்கவேண்டும்.தி.மு.க ஆர்.எஸ். பாரதியின் கடிதம், ``தாய்மையைக் கொச்சைப்படுத்துவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத  ஒன்று. தி.மு.க இதைக் கண்டித்தால் மட்டுமே கண்ணியத்தை எதிர்பார்க்க முடியும்.