வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (19/04/2018)

கடைசி தொடர்பு:11:45 (19/04/2018)

நிர்மலா தேவி விவகாரம்! விசாரணையைத் தொடங்கியது சி.பி.சி.ஐ.டி

மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைக்கும்நோக்கில் பேசிய பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் இன்று விசாரணையைத் தொடங்கினர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள தேவாங்கர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை, அந்தக் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி, பாலியல் தொழிலுக்கு அழைக்கும் உரையாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டார். நிர்மலா தேவி தொடர்பான வழக்கு, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், வழக்குத் தொடர்பான கோப்புகளைப் பெற்று, சி.பி.சி.ஐ.டி பிரிவினர் விசாரணையைத் தொடங்கினர். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினரிடம் தகவல்களைப் பெற்ற சி.பி.சி.ஐ.டி போலீஸார், இன்று சம்பந்தப்பட்ட கல்லூரியில் விசாரணை நடத்த  உள்ளதாகத் தெரிகிறது.