``பெண்ணென்று வந்து விட்டால், லஷ்மி... கனிமொழி இருவருக்கும் பேசுவேன்!” - வானதி | I will take a neutral stand when it comes to women issue - Vanathi

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (19/04/2018)

கடைசி தொடர்பு:12:29 (19/04/2018)

``பெண்ணென்று வந்து விட்டால், லஷ்மி... கனிமொழி இருவருக்கும் பேசுவேன்!” - வானதி

``பெண்ணென்று வந்து விட்டால், லஷ்மி... கனிமொழி இருவருக்கும் பேசுவேன்!” - வானதி

''ஸ்பெக்ஸ் ரொம்ப அழகா இருக்கு. இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க'' - சில நாள்களுக்கு முன்புதான் அமைச்சர் விஜயபாஸ்கர், பெண் நிருபர் ஒருவரிடம் இப்படி பேசினார். இந்தப் பிரச்னை ஓய்ந்திருந்த வேளையில், தமிழக ஆளுநர் அடுத்து ஆரம்பித்து வைத்திருக்கிறார். கேள்வி கேட்ட பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டியது, அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையில் கனிமொழி பற்றிய ஹெச்.ராஜாவின் பதிவு எனப் பொதுவெளியில் இயங்கும் பெண்களிடம், ஆண்கள் நடந்துகொள்ளும் விதம் மிகவும் அபாயகரமாக இருக்கிறது. இந்நிலையில். 'பெண்கள் அரசியலுக்கும் பொதுவாழ்வுக்கும் வந்தால், அவர்களை மலினப்படுத்துவதும் கீழ்த்தரமாக விமர்சிப்பதும் கவலைக்குரிய வகையில் அதிகரித்து இருக்கிறது. இதற்குச் சம்பந்தப்பட்ட பெண்களின் தகுதி, பதவி, கல்வியறிவு எதுவுமே தடைபோட முடியவில்லை. பெண்களை நுகர்வுப் பண்டமாகப் பார்க்காமல், சக மனுஷியாக, தாயாக, மகளாக, சகோதரியாக, தோழியாகப் பாருங்கள்' எனத் தமிழ்நாடு  பா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலாளர், வானதி சீனிவாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூடாகப் பதிவிட்டுள்ளார். இது, கனிமொழிக்காக ஆதங்கப்பட்டு எழுதியதா? அவரிடமே கேட்டோம்.

வானதி

``கனிமொழியை அப்படிச் சொன்னது தப்பு. ஒரு பெண்ணை அப்படிச் பேசியதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கனிமொழிக்கு மட்டுமல்ல, ஜோதிமணியிடம் அநாகரிகமாகப் பேசியதும் தவறுதான். இந்த அநாகரிகங்களை எந்த விதத்திலும் அனுமதிக்கவே முடியாது'' என்று அழுத்தம் திருத்தமாகப் பேச ஆரம்பித்தார், வானதி சீனிவாசன். 

``புதிதாகப் பொதுவெளிக்கு வரும் பெண்களை மிரட்டும் அளவுக்குத்தான் இன்றைய சமுதாயம் இருக்கிறது. போராட்டத்துக்கு வரும் பெண்ணின் இடுப்பைக் கிள்ளுகிறார்கள். இடுப்பைக் கிள்ளிய கட்சிக்காரன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? ஸ்டாலின் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டாரா? உங்கள் வீட்டுப் பெண் என்றால்  பொங்குவீர்கள். கட்சிக்காரப் பெண் என்றால், அமைதியாக இருப்பீர்களா?'' என்ற வானதியின் வார்த்தைகளில் ரெளத்திரம் தெறிக்கிறது.

``பெண்களுக்கு எதிரான வசவு வார்த்தைகள் நம் சமூகத்தில் புதிதான விஷயமில்லை. ஜெயலலிதாவைப் பேசாத பேச்சா? எந்த அளவுக்குப் பெண்களை கேவலமாகப் பேசமுடியுமோ அந்த அளவுக்குப் பேசினார்கள். பொதுவாழ்வில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, சராசரி பெண்களாக இருந்தாலும் சரி, நாம்தான் தைரியம் பழக வேண்டும். பாரதியார் கவிதைகளைத் துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள். சக பெண்களுக்கு ஓர் ஆபத்து வருகிறது என்றால், குறைந்தபட்சம் குரலையாவது உயர்த்துங்கள். உங்கள் அலுவலகத்தில் இப்படி ஒரு பெண்ணுக்கு நடக்கும்போது, ஆதரவாக இருங்கள். மனதளவில் அவளுக்குத் தைரியம் கொடுங்கள்.

நீங்கள் அம்மாவாக இருந்தால், 'பெண்ணை உடலாகப் பார்க்காதே. அவள் சக உயிர். அவளும் உன்னை மாதிரியே சமுதாயத்தில் வாழப் பிறந்தவள்' என்று ஆண் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுங்கள். சுவாதி கொலைக்குப் பிறகு, வெளியூரிலிருந்து பெண்களை வேலைக்கு அனுப்பவே பெற்றோர்கள் பயந்தார்கள். நிர்பயாவுக்குப் பிறகு பயணம் செய்ய பயந்தார்கள். ஆனாலும், பெண்களின் முன்னேற்றம் இந்த மாதிரியான குற்றச் செயல்களால் நின்றுவிடப் போவதில்லை. ஆனால், வேகத்துக்கு ஒரு தடைக்கல்லாக மாறும்'' என்று வருத்தப்பட்ட வானதி சீனிவாசனிடம், ஆளுநர் பன்வாரிலால் விவகாரத்தை எடுத்தோம்.

ஆளுநர்

``ஆளுநர் விஷயத்தை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், தனிப்பட்ட முறையில் அந்தப் பெண்ணை அறைக்கு அழைத்துச்சென்று கீழ்த்தரமான எண்ணத்தில் எதுவும் செய்யவில்லை. அத்தனை கேமராக்கள் முன்னிலையில்தான் கன்னத்தை தட்டிவிட்டுச் சென்றார். ஆனாலும், அதில் சம்பந்தப்பட்ட நிருபர் லஷ்மிக்கு விருப்பமில்லை என்றால், அது தவறுதான். பெண்ணின் அனுமதியின்றி, அவளுக்கு உயிர் கொடுத்த அப்பாவாக இருந்தாலும், தொடக்கூடாது. வயசுக்கு வந்துவிட்டாலே அப்பாவே நம்மிடம் அதிகம் நெருங்க மாட்டார் என்பதுதான் நம் கலாசாரம், பண்பாடு. அந்தப் பெண்ணின் அனுமதியின்றி, அவர் தொட்டது தவறுதான். .ஆனால், அதற்காக ஆளுநர் மன்னிப்பும் விளக்கமும் கொடுத்த பிறகும் இவ்வளவு பெரிய அரசியலாக்குவது சரியா? அந்த நிருபருக்குக் குரல் கொடுத்ததுபோலவே மற்றப் பெண்களுக்கும் குரல் கொடுப்பீர்களா? ஒரு ஆண் மகனைத் திட்டுவதற்கும் அம்மா, மனைவி, அக்கா, தங்கையை இழுக்கும் சமுதாயம் இது. மீண்டும் சொல்கிறேன். அந்த நிருபரின் அனுமதியின்றி தொட்டது தப்புதான். அதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால், மற்றக் கட்சிகள் அந்தப் பெண்ணை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றன. தயவுசெய்து பெண்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்'' என்று முடித்தார் வானதி சீனிவாசன்.


டிரெண்டிங் @ விகடன்