வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (19/04/2018)

கடைசி தொடர்பு:14:00 (19/04/2018)

மாவோயிஸ்ட் நவீன்பிரசாத் கொல்லப்பட்ட நாள்! போலீஸ் கண்காணிப்பில் கொடைக்கானல்

ரெட் அலர்ட்

மாவோயிஸ்ட்  நவீன்பிரசாத் கொல்லப்பட்ட நாள்! போலீஸ் கண்காணிப்பில் கொடைக்கானல்

மாவோயிஸ்ட் நவீன்பிரசாத் கொல்லப்பட்ட நாள் இன்று என்பதால், கொடைக்கானலில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

அது, 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம். அதிகாலை வேளையில், திண்டுக்கல்  நாகல்நகர் ரவுண்டான அருகில் சைரனை அலறவிட்டபடி பறந்துகொண்டிருந்தது எஸ்.பி-யின் கார். அதைத் தொடர்ந்து அதிவிரைவுப்படை வேன். இவ்வளவு அவசரமாக எங்கு செல்கிறார்கள் என யோசிப்பதற்குள் வரிசை வரிசையாக மேலும் சில போலீஸ் வாகனங்கள் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தன. சில பல போன் கால்களுக்குப் பிறகு, கொடைக்கானலில் ஒரு என்கவுன்டர் என்ற தகவல் கிடைத்தது. ஆனால், சரியான இடம் தெரியவில்லை.

அடுத்த சில நிமிடங்களில், செய்தியாளர்கள் கும்பல் கும்பலாக கொடைக்கானல் நோக்கி நகரத் தொடங்கினர். மாவோயிஸ்டு நடமாட்டம் அதிகமாக இருந்ததால், குளிர்ச்சியான கொடைக்கானல் தகித்துக்கிடந்த காலகட்டம். பெரியகுளம் அருகே முருகமலை, வருஷநாடு, கொடைக்கானல் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தங்கியிருந்தது அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது. முருகமலைப் பகுதியில் சுந்தரமூர்த்தி என்ற மாவோயிஸ்ட் கைதுசெய்யப்பட்டபோதுதான், மாவோயிஸ்ட் நடமாட்டம் தமிழகத்தில் பரவலாக இருந்தது. காட்டுரோடு தாண்டும்போது, சம்பவம் நடந்த இடம் வடகவுஞ்சிப் பகுதியாக இருக்கலாம். அந்தப் பகுதிக்கு அதிக அளவில் போலீஸ் வாகனங்கள் சென்றுகொண்டிருக்கின்றன என்ற தகவல் கிடைத்தது. 

கொடைக்கானலில் போலீஸ் கண்காணிப்பு 

இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு, கொடைக்கானலை அடைந்தோம். அதற்குள், 'மாவோயிஸ்ட்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், நவீன்பிரசாத் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்' என்ற வரையிலான தகவல்களைச் சேகரித்து விட்டோம். நாங்கள் கொடைக்கானலை அடையும்போது, நவீன்பிரசாத் உடல் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தது. பலத்த கட்டுப்பாடுகளுக்கிடையே நவீன்பிரசாத் உடலை புகைப்படம் எடுத்தோம். என்கவுன்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நவீன்பிரசாத் அணிந்திருந்த உடையில், தோட்டா துளைத்த தடயங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. இது, பல சந்தேகங்களை ஏற்படுத்திய வேளை, பொய்யாவழி என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுகளுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த சண்டையில் நவீன்பிரசாத் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த ஏழு பேர் தப்பியோடிவிட்டதாகவும், அவர்களிடமிருந்து  30 தோட்டாக்கள் மற்றும் கிரானைட்கள் கைப்பற்றப்பட்டன எனவும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. 

'குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்' என்ற அமைப்பு, நவீன் என்கவுன்டர் தொடர்பான பல்வேறு தகவல்களை ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டார்கள். நவீன் பிரசாத் வேறு ஒரு பகுதியில் அடித்துக்கொள்ளப்பட்டு, இங்கு கொண்டு வந்து என்கவுன்டர் செய்ததாக போலீஸார் நாடகமாடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சில ஆதாரங்களுடம் மக்கள் மன்றத்தில் வைத்தார், ஆ.மார்க்ஸ். காலம் செல்லச் செல்ல அந்த வழக்கை மக்கள் மறந்துவிட்டார்கள்.

ஆனால், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 19-ம் தேதி, கொடைக்கானல் மலைப்பகுதியில் கண்காணிப்பைக் கடுமையாக்குகிறது போலீஸ். கொல்லப்பட்ட நவீன்பிரசாத்துக்கு யாராவது நினைவஞ்சலி கொண்டாடுகிறார்களா? இன்னும் அவரது கூட்டாளிகள் இருக்கிறார்களா என நக்சல் தடுப்புப் பிரிவு உளவுத்துறை போலீஸார் நோட்டம்விட்டுவருகிறார்கள். இந்த ஆண்டும், இன்று கொடைக்கானல் மலைக்கிராமங்கள் முழுவதும் ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்ட பகுதிபோல, போலீஸாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. மலைப்பகுதி முழுவதும் போலீஸார் ரோந்து செல்கிறார்கள்.

 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க