``வயதைச் சொல்லித் தப்பிக்காதீர்கள்!” - திராவிடர் விடுதலைக் கழகம்

``வயதைச் சொல்லி தப்பிக்க நினைக்காதீர்கள்” என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது திராவிடர் விடுதலைக் கழகம்.

``வயதைச் சொல்லித் தப்பிக்காதீர்கள்!” - திராவிடர் விடுதலைக் கழகம்

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பேராசிரியையான நிர்மலா தேவி விவகாரம்தான் தமிழ்நாட்டின் தற்போதைய ஹாட் டாபிக். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைத் தொடர்புபடுத்தி கருத்துகள் வெளியே வந்துகொண்டிருப்பதால் தகித்துக்கொண்டிருக்கிறது தமிழகம். மாணவ - மாணவியர் மட்டுமல்லாமல், பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தமிழக ஆளுநருக்கு எதிராகக் களத்தில் குதித்திருக்கின்றன. இதற்கிடையில் இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான  ஆர்.சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்து உத்தரவிட்டார் தமிழக ஆளுநர். அதற்கும் கடுமையான விமர்சனங்கள் கிளம்பவே, ராஜ்பவனில் அவசர அவரசமாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அந்தப் பேராசிரியை நிர்மலா தேவி யார் என்றே எனக்குத் தெரியாது. அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை. 78 வயதான நான், கொள்ளுப் பேரனையே எடுத்துவிட்டேன். அதனால் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது அடிப்படை ஆதாரமற்றது” என்று தெரிவித்திருந்தார்.

ஆளுநர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

இந்த நிலையில், தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த வழக்கைச் சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரியும் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஆளுநர் மாளிகையைத் முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரையும் கைதுசெய்தது போலீஸ். 

இதுகுறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு அய்யப்பன், “அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பக்கம்தான் விசாரணை திரும்புகிறது. இது கிரிமினல் குற்றம் என்பதால் போலீஸ் விசாரணையும், நடவடிக்கையும் இருக்கிறது. அதற்குமுன் பல்கலைக்கழகத்தின் விசாரணை இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. இந்த நடவடிக்கைகளில் திருப்திகரமான நடவடிக்கை இல்லாதபோதுதான் ஆளுநர் தலையிடுவது வழக்கம். ஆனால், நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் வெளியானவுடன் உடனடியாக, தன்னிச்சையாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் தனிநபர் விசாரணைக் குழுவை நியமிக்கிறார். பல்கலைக்கழகம் நியமித்த விசாரணைக்குழுவைக் கலைத்து உத்தரவிடுகிறார். ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ எனும் கதையாக உடனே பிரஸ் மீட் வைத்து, ‘எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அந்தப் பேராசிரியையை நான் பார்த்ததே இல்லை' என்று சொல்கிறார். ஆளுநரின் இப்படியான நடவடிக்கைகள் அவர்மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம்

அதுமட்டுமல்லாமல் தன் வயதைக் காரணம் காட்டுகிறார். பாலியல் உணர்வு என்பது உடல்சார்ந்த விஷயம் மட்டும் கிடையாது. அது மனம் சார்ந்த விஷயம். ஏற்கெனவே பாலியல் புகாரில் சிக்கிய மேகாலயா ஆளுநர் சண்முகநாதனுக்கு இவரைவிட வயது அதிகம். அதுமட்டுமல்லாமல், ‘ஆளுநர் மாளிகை பாலியல் கூடாரமாக மாறிவிட்டது. பாலியல் தொழிலாளிகள் ஆளுநர் மாளிகைக்கே வந்து செல்கிறார்கள்’ என்று ஆளுநர் மாளிகையில் இருந்தே உள்துறை அமைச்சகத்துக்குப் புகார் சென்றது. அதன் அடிப்படையிலேயேதான் அவர்மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. கடந்தகால வரலாறுகள் இப்படியிருக்க, எனக்கு 78 வயதாகிறது; கொள்ளுப்பேரன் இருக்கிறான் என இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் கூறுவது எல்லாம் ஏற்புடையது அல்ல. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவரே விசாரணைக் கமிஷன் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீது உடனே நடவடிக்கை எடுப்பதோடு, மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வேண்டும். மேலும், இந்த வழக்கை உடனே சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால், பி.ஜே.பி-யின் புதுச்சேரி ஏஜென்டாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கிரண்பேடியைத் தொடர்ந்து முற்றுகையிடுவோம். மறுபடியும் சொல்கிறேன், வயதைச் சொல்லித் தப்பிக்க நினைக்காதீர்கள் ஆளுநர் அவர்களே” என்று முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!