வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (19/04/2018)

கடைசி தொடர்பு:15:42 (19/04/2018)

தூக்க மாத்திரை கொடுக்காததால் காத்திருந்து திருடிய கொள்ளையர்கள்!

கொள்ளை

 

சென்னையில் தூக்க மாத்திரை கொடுக்காத மருந்துக்கடை ஊழியரைத் தாக்கிவிட்டு நகை, பணம், செல்போன் ஆகியவற்றை இரண்டு வாலிபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். 

சென்னை, சேமியர்ஸ் சாலை, மூப்பனார் மேம்பாலம் அருகில் மருந்துக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மருந்தாளுநராகப் பணியாற்றிவருகிறார். நேற்றிரவு இரவு மருத்துக்கடைக்கு 25 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் இரண்டு வாலிபர்கள் டூவீலரில் வந்துள்ளனர். அவர்கள், விக்னேஸ்வரனிடம் தூக்க மாத்திரை கேட்டுள்ளனர். அப்போது மருந்து சீட்டு இருந்தால் மட்டுமே தூக்க மாத்திரையைக் கொடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வெளியில் சென்ற வாலிபர்கள் கடையின் முன்பு காத்திருந்தனர். பிறகு, அவர்கள் இருவரும் கடைக்குள் நுழைந்தனர். அப்போது விக்னேஸ்வரன் மட்டும் தனியாக இருந்தார். 

மீண்டும் அவரிடம் தூக்க மாத்திரையைக் கேட்டுள்ளனர். அப்போதும் அவர் கொடுக்கவில்லை. இந்தச் சமயத்தில் வாலிபர் ஒருவர், ஒரு நீளமான கத்தியை எடுத்து விக்னேஸ்வரனை மிரட்டியுள்ளார். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் அவர் அதிர்ச்சியில் உறைந்தார். அப்போது, கடையிலிருந்த 23,400 ரூபாய், விக்னேஸ்வரன் அணிந்திருந்த தங்கச் செயின், அவரது செல்போன் ஆகியவற்றை வாலிபர்கள் பறித்தனர். பிறகு, விக்னேஸ்வரனின் தலையில் ஓங்கி அடித்த கொள்ளையர்கள், அவரைக் கடைக்குள் வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் நிலைதடுமாறிய விக்னேஸ்வரன், சிறிது நேரத்துக்குப் பிறகு கதவைத் திறக்க முயன்றுள்ளார். ஆனால், கடையின் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் அவரால் திறக்க முடியவில்லை. இதனால், கடைக்குள் இருந்தபடியே காப்பாற்றுங்கள் என்று அவர் சத்தம்போட்டார். கடைக்குள் இருந்து சத்தம் வருவதைக் கேட்டு, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். பிறகு அவர்கள் இரவு 11.30 மணியளவில் கடையைத் திறந்து விக்னேஸ்வரனைக் காப்பாற்றினர். பின்னர், இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

போலீஸார் கூறுகையில், ``கொள்ளை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, கொள்ளையர்களின் உருவம், டூவீலர் நம்பர் ஆகியவை தெரிந்துள்ளது. அதன்மூலம் கொள்ளையர்களை விரைவில் கைதுசெய்துவிடுவோம்" என்றனர்.