வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (19/04/2018)

கடைசி தொடர்பு:15:42 (19/04/2018)

``ஹெச்.ராஜா சொன்ன கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை!" தமிழிசை

``நிர்மலா தேவி மாணவிகளை மூளைச்சலவை செய்வது ஒரு சதவிகிதம்கூட ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்செயல். அதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்."

தமிழிசை

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம், ஆளுநரின் செயல்பாடு, ஹெச்.ராஜாவின் கருத்து எனத் தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகள் கொதிப்பில் இருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர், டாக்டர் தமிழிசை செளந்திரராஜனிடம் பேசினோம்.

`` `அட்ஜஸ்ட்மென்ட்' என்பது எல்லாத் துறைகளிலும் அதிகரித்துவருவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கல்லூரி மாணவிகளையும் இப்படித் தவறான பாதைக்கு அழைக்கும் செயலை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``இது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது. எந்தக் காலகட்டத்திலும் இருக்கக் கூடாதது. யாராக இருந்தாலும் திறமையின் மூலமே முன்னேற வேண்டும். பெண்களுக்குத்தான் `அட்ஜஸ்ட்மென்ட்' பிரச்னை அதிகம் நடக்கிறது. இதை, பெண்கள் மீது தொடுக்கப்படும் மனத்தாக்குதலாகவே பார்க்கிறேன். இதனால், அந்தப் பெண் மட்டுமன்றி, அவர் குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. நிர்மலா தேவி மாணவிகளை மூளைச்சலவை செய்திருப்பது ஒரு சதவிகிதம்கூட ஏற்றுக்கொள்ள முடியாத குற்றமே. அதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படித் தவறான வழியில் மாணவிகளையும் பணியில் இருக்கும் பெண்களையும் அடிபணிய வைப்பது தவறானது."

``உயர் பொறுப்பில் இருப்பவர்களே இந்தப் பிரச்னையில் முக்கியக் காரணியாக இருக்கும்போது, `அட்ஜஸ்ட்மென்ட்' பிரச்னையைத் தீர்ப்பதும் தவிர்ப்பதும் எளிதாக நடந்துவிடுமா?"

``உண்மைதான். உயர் பொறுப்பில் இருக்கும் வக்கிரப்புத்திகொண்ட சில ஆண்கள்தாம், பெண்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக மாற்றுகிறார்கள். பெண்களின் உணர்வு, கனவு, எண்ணங்கள் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. புகாருக்கு உள்ளாகும் நபர், உயர் பொறுப்பில் இருப்பார். அதனால், பல நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் வெளியிலேயே வராது. பெண்ணுக்குரிய நீதி கிடைக்காமல் செய்துவிடுவார்கள். சில இடங்களில் பாதிக்கப்பட்டவரின் வேலையும் பறிபோகிறது. இதனால், அந்தப் பெண்ணை நம்பியிருக்கும் குடும்பமும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகிறது. வேறு இடத்திலும் உடனடியாக வேலைக் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மிக மிகச் சிக்கலான பிரச்னை இது. இதை உடனடியாகச் சரிசெய்துவிட முடியாது. இந்தக் குற்றச் செயல்களை ஆரம்பக் கட்டத்திலேயே முறியடிக்க வேண்டும். அதற்குப் பெண்கள் மிகத் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். அதற்கான சாதகமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். பெண்கள், தங்களின் பிரச்னையைத் தைரியமாகச் சொல்லும் ஓர் அமைப்பு வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் இயக்கக்கூடிய அந்த அமைப்பில், நடுநிலையான சமூக ஆர்வலர்கள், கவுன்சலிங் கொடுப்பவர்கள், பெண்ணியவாதிகள் எனப் பல துறையைச் சார்ந்தவர்கள் இருப்பது முக்கியம். பெண் உறுப்பினர்கள் அதிக அளவில் இருக்க வேண்டும். அந்த அமைப்பின் மீது நம்பகத்தன்மை இருக்க வேண்டும். புகார் கூறும் பெண்கள் பற்றிய செய்திகள் கடுகளவும் வெளியில் கசியக் கூடாது. புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி கிடைக்க வேண்டும். இத்தகைய அமைப்பு அமைந்தால், 'அட்ஜஸ்ட்மென்ட்' பிரச்னையை நிச்சயம் தீர்க்க முடியும்.'' 

``நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் பெயர் அடிபடுகிறதே..."

``விசாரணை கமிட்டி தன் பணியைத் தொடங்கியிருக்கிறது. முழு விசாரணை முடியட்டும். அதற்குள் ஏன் சந்தேகங்களைக் கிளப்ப வேண்டும்? நிர்மலா தேவி மாணவிகளைக் கடுமையாக மூளைச்சலவைச் செய்திருக்கிறார். பெரிய நபர்களுடன் தனக்கு நட்பு இருப்பதாகப் போலியாகக் காட்டிக்கொண்டு, மாணவிகளை தன் வழிக்குக்கொண்டுவர நினைத்திருக்கிறார். அதனால், ஆளுநரின் பெயரையே சூழ்ச்சியாகப்  பயன்படுத்தியிருக்கலாம். இப்படி உயர் பொறுப்பில் இருப்பவர்களின் பெயர்களைப் பலரும் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். விசாரணை முடியட்டும். குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டும்."

தமிழிசை

``பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் நடந்துகொண்ட விதம் பற்றி உங்கள் கருத்து என்ன?"

``தவறு இருக்கும்பட்சத்தில் முதல் ஆளாக நானே எதிர்ப்பேன். அதேசமயம், தவறு இல்லாதபட்சத்தில் தவறாகச் சித்திரித்தவர்களைக் கண்டிப்பேன். அன்பின் வெளிப்பாட்டில் ஒருவரின் தலைமீது பலரும் கை வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள். எந்தக் கண்ணோட்டத்தில் பிறர் நம்மை அணுகுகிறார் என்பதைத் தெளிவாக யோசிக்க வேண்டும். 78 வயது பெரியவர், ஒரு பெண்ணிடம் எந்தக் கண்ணோட்டத்தில் அணுகியிருப்பார் என்பதை நியாயமாகப் பார்க்க வேண்டும். ஆனால், விருப்பமின்றி ஒருவர் மீது யாரும் கைவைக்கக் கூடாது. இந்த விவகாரத்தில், அந்தப் பத்திரிகையாளருக்கு அது பிடிக்கவில்லை. அதனால், ஆளுநரும் மன்னிப்பு கேட்டுவிட்டார். இனியும் பிரச்னையைப் பெரிதாக்குவது சரியில்லை."

``ஹெச்.ராஜா அடுத்தடுத்து பிறரைக் காயப்படுத்தும் கருத்துகளை வெளியிடுகிறார். இதை பிஜேபி மேலிடம் தட்டிக் கேட்காதா?"

``அந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. `தமிழக அரசியல் நாகரிகமாக எடுத்துச்செல்லப்பட வேண்டும் என நினைக்கிறேன். எதிர்ப்பு தெரிவிப்பதும் கண்ணியமாக இருக்க வேண்டும்' என நேற்று சமூக வலைதளத்தில் என் கருத்தைத் தெரிவித்திருந்தேன். என்றைக்குமே ஆக்கப்பூர்வமான அரசியல்தான் ஆரோக்கியமானது."

``ஜல்லிக்கட்டு, நீட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், காவிரி மேலாண்மை வரை தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறதே..."

``இந்தக் குற்றச்சாட்டை கண்டிக்கிறேன். சாலைவசதி, விமான நிலையங்கள், துறைமுகங்கள் எனத் தமிகத்துக்கு நிறையத் திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது. இங்கிருக்கும் அரசியல் கட்சியினர், மக்களை மத்திய அரசுக்கு எதிராகத் திசை திருப்புகிறார்கள். தனக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்படுவது தெரிந்திருந்தும் பிரதமர் தமிழகம் வருகிறார். தமிழக மக்களின் மேல் உள்ள அன்பில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, காவிரி விவகாரத்தில் எதுவும் செய்யவில்லை. அதனால், காவிரி விவகாரத்தில் உள்ள சிக்கல்களை முழுமையாகக் கண்டறிந்து, நிரந்தரத் தீர்வை நோக்கி பிஜேபி செயல்படுகிறது. அதனால், சிறிது காலதாமதம் ஆகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்."

``இப்போது அப்பாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? நீங்கள் போய் அவரைப் பார்த்தீர்களா?"

``சில மாதங்களுக்கு முன்பு அப்பாவுக்கு (குமரி அனந்தன்) உடல்நிலை சரியில்லாமல் போனது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் காங்கிரஸ்காரர். நான் போய் அவரைச் சந்தித்தால், அதையும் அரசியலாக்குவார்கள் என்பதால், சந்திப்பைத் தவிர்த்தேன். சமீபத்தில், தூத்துக்குடி சென்ற அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. நான்தான் அங்கே சென்று சென்னைக்கு அழைத்துவந்தேன். என் கணவர்தான் அப்பாவுக்குச் சிகிச்சை அளித்துவருகிறார். அரசியல் ரீதியாக நாங்கள் இரு துருவங்கள். நான் பிஜேபியில் இருப்பதால், இன்றுவரை அப்பாவுக்கு என் மேல் கோபம் உண்டுதான். அதனால், தந்தை மகள் உறவு சுமுகமாக இல்லை என்பதும் உண்மைதான். ஆனாலும், எங்கள் இருவரையும் பிரிக்க முடியாது. தற்போது, தினமும் அப்பாவைச் சந்தித்து நலம் விசாரிக்கிறேன். அவர் நலமுடன் இருக்கிறார்."


டிரெண்டிங் @ விகடன்