தாகத்தில் தவிக்கும் கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள்: அதிர்ச்சியளிக்கும் களநிலவரம்! | Problems in integrated Drinking water project!

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (19/04/2018)

கடைசி தொடர்பு:16:29 (19/04/2018)

தாகத்தில் தவிக்கும் கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள்: அதிர்ச்சியளிக்கும் களநிலவரம்!

தாகத்தில் தவிக்கும் கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள்: அதிர்ச்சியளிக்கும் களநிலவரம்!

தமிழ்நாட்டின் நரம்பு மண்டலமாகவே திகழ்கின்றன காவிரியும், அதன்துணை ஆறுகளும். இதன் ரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டால் என்னவாகும்? நினைத்துப் பார்ப்பதற்கே நெஞ்சு பதறுகிறது. காவிரி தண்ணீர் வருவது நிரந்தரமாக நின்றுபோனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள், வரைபடத்தில் வெறும் கோடுகளாக மட்டுமே மிச்சமிருக்கும். காவிரி இல்லாமல் தமிழர்களின் வாழ்வு இல்லை.

20 மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து கோடி தமிழர்களின் வாழ்வாதாரமாக விளங்கிக் கொண்டிருக்கிறது காவிரி நீர். தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களுக்கு மட்டுமல்ல; தென் மாவட்டமான ராமநாதபுரம் மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கும் காவிரிதான் குடிநீர் வழங்குகிறது. மேட்டூர் அணையிலிருந்து நாகப்பட்டினம் வரை காவிரி பயணிக்கும் பகுதிகளில் 110-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்குக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளிலும், கரையோரங்களிலும் அதிநவீன ராட்சத போர்வெல்கள் அமைத்து தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. காவிரி தண்ணீர் வரவில்லையென்றால் நிலத்தடி நீர் வறண்டு போகும். ஐந்து கோடி தமிழர்களின் எதிர்காலம் இருண்டு போகும். அதன் தொடக்கமாகத்தான் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி இருள் வியாபிக்கத் தொடங்கியுள்ளது. இருபதாண்டுகளுக்கு முன்பு வரை காவிரி டெல்டா கிராமங்களில் 15 அடி ஆழத்தில் அடி பம்புகள் அமைத்து, குடிநீர் தேவையை நிவர்த்தி செய்து கொண்டார்கள். தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீரில் பெரும்பகுதியை கர்நாடகம் கபளீகரம் செய்ததால் நிலத்தடி நீர் 100 அடிக்கும் கீழ் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.

மழை இல்லாத காலங்களில் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் பல நூறு அடி ஆழத்திற்குக் கீழே சென்று மாயமாவது வழக்கமாகி விட்டது. காவிரி நீர் பாயாததாலும் நிலத்தடி நீர் அபாய ஆழத்திற்கு சென்று விட்டதாலும் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள குக்கிராமங்களில் கடல் நீர் உள்ளே புகுந்து நிலத்தடி நீர் உப்புநீராக மாறிவிட்டது. இங்கு நிலத்தடி நீர் பயன்பாட்டில் இல்லை. இங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், நீண்ட தூரத்திலிருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை முழுமையாக நம்பியுள்ளனர்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

இதுவும்கூட இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறைதான் கிடைக்கும். ஒரு குடும்பத்திற்கு 10 முதல் 20 குடங்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படும். குடிக்க, சமைக்க, குளிக்க என அனைத்துத் தேவைகளையும் இதற்குள்ளேயேதான் நிறைவு செய்தாக வேண்டும். கோடை காலம் தொடங்கி விட்டால் அதற்கும் வாய்ப்பு இல்லை. கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில் நிலத்தடி நீர் வறண்டு விடுகிறது. ஊராட்சிகளுக்கு வாரம் ஒருமுறை தண்ணீர் கிடைப்பதே அபூர்வம். தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் எங்கிருந்தோ நீண்ட தொலைவிலிருந்து டேங்கர் லாரிகளில் கொண்டு வரும் தண்ணீரை ஒரு குடத்திற்கு 10 ரூபாய் விலை கொடுத்து வாங்குகிறார்கள். காவிரி நீர் வருவது முழுமையாக நின்றுபோனால், நிலத்தடி நீர் வறண்டு போகும். ஆறுகளில் தண்ணீர் ஓட்டம் இல்லையென்றால், மேகம் முகிழ்ந்து மழைப் பொழிவும் நின்று போகும். கொஞ்சம்கூட நிலத்தடிநீர் பூமியில் இருக்காது. கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் ஒவ்வொன்றாகச் செயலிழந்து போகும். இதற்கான உதாரணம் இப்போதே தொடங்கி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. தற்போது இங்கு தண்ணீர் இல்லாததால், சென்னைக்குத் தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுவிட்டது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்தான் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சென்னைக்குக் குடிநீராக அனுப்பப்படுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளார்கள். காரணம் நிலக்கரிச் சுரங்க தண்ணீர் வெளியேற்றப்படும் பகுதிகளில் உள்ள விவசாயிகள், இதைத்தான் பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தார்கள். எதிர்ப்பு அதிகமானால் சென்னைக்கு நிலக்கரி சுரங்க தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தப்படும். சென்னை மக்களின் எதிர்காலம் பெரும் இருளில் தள்ளப்படும். காவிரி தண்ணீர் நிரந்தரமாக கர்நாடகாவில் சிறை வைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் பெரும்பாலான கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உயிரிழக்கும். தாகம் தீர்க்க தண்ணீரின்றி ஐந்து கோடி தமிழர்கள் பேரபாயத்தைச் சந்திக்கக்கூடும். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close