வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (19/04/2018)

கடைசி தொடர்பு:16:35 (19/04/2018)

`பிச்சை எடுத்து கல்வி உதவி'- ரூ.1 லட்சம் பரிசு வழங்கி மாற்றுத்திறனாளியை நெகிழவைத்த திவாகரன்

காரைக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வராஜுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி திவாகரன் கௌரவித்துள்ளார். 

திவாகரன்

காரைக்குடியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி செல்வராஜ். சிறுவயதில் திண்ணையிலிருந்து கீழே விழுந்ததால் கால் செயலிழந்துவிட்டது செல்வராஜுக்கு. ஆனாலும், மனம்தளராமல் தன்னம்பிக்கையுடன் போராடி பி.ஏ பொருளாதாரம் முடித்தார். பட்டம் பெற்றதும் மின்வாரியத்திலிருந்து வேலை கிடைத்தது. ஆனால், அதற்காக 2,000 ரூபாய் லஞ்சம் கேட்கவே, நேர்மையாகவே வேலை வாங்குவேன் எனக் கூறி வேலையை உதறித் தள்ளிவிட்டார். இருந்தும் சும்மா இருக்க முடியாமல் பஞ்சர் ஒட்டுதல், மெக்கானிக் வேலை செய்துவந்தார். படித்த படிப்பை நினைவுகூரும் வகையில் அருகில் இருந்த குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துவந்தார். தனி ஆளாக இருக்கும் செல்வராஜ் பிற்காலத்தில் பிச்சை எடுத்து அதன்மூலம் கிடைத்த வருமானத்தில் குழந்தைகளுக்கு கல்வி உதவிகளைச் செய்துவருகிறார். 73 வயது ஆனபோதிலும் தினமும் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து கல்வி உதவிகளைச் செய்துவருகிறார். 

இந்நிலையில் செல்வராஜுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளார் சசிகலாவின் தம்பியான திவாகரன். திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் போஸ் மக்கள் பணியகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் மூலமாகத் தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் செல்வராஜுக்கு இந்தப் பரிசை இருவரும் வழங்கியுள்ளனர். செல்வராஜின் பணிகளை கௌரவிக்கும் விதமாக அவருக்கு இந்தப் பரிசை வழங்கியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க