`எங்களை ஒன்றிணைத்தது சிறை அனுபவம்' - காவிரிக்காகப் போராடி சிறை சென்ற மாணவர்கள் பேட்டி

``காவிரிக்காகப் போராடிய எங்களைச் சிறையில் அடைத்து மீண்டும் போராட தூண்டியுள்ளது தமிழக அரசு'' என்கிறார்கள் திருச்சி மாணவர்கள்.

மாணவர்கள்

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் கடந்த 12-ம் தேதி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் மாணவர்கள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர். மாணவர்களின் போராட்டம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், மாணவர்களைக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நடந்த களேபரங்களில் அரசுப் பேருந்து மற்றும் கர்நாடகப் பேருந்துகள் தாக்குதலுக்குள்ளானது. அதனையடுத்து, போலீஸார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.

மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை காவல்நிலையம், உறையூர் காவல் நிலையம், தில்லைநகர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்த திருச்சி மாநகர போலீஸார் திருச்சி குற்றவியல் 4-வது நீதித்துறை நடுவர் திருநாவுக்கரசு முன்னிலையில் 20 பேரை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அப்போது, மாணவர்கள், ``இந்தச் சம்பவத்துக்கும் எங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. கைது செய்யப்பட்ட நாங்கள் எப்படிக் கலவரத்தில் ஈடுபடுவோம். எங்களை அடித்து, சித்ரவதை செய்ததுடன், காயங்களுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை” என மேலாடைகளைக் களைந்து, காயங்களை நீதிபதியிடம் காண்பித்து முறையிட்டனர். வரும் 20-ம் தேதிவரை சிறைக்காவல் வைக்கப்பட்டிருந்த மாணவர்களுக்காக மக்கள் அதிகாரம் மற்றும் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியோர் ஜாமீன் மனுத்தாக்கல் செய்து வாதிட்டனர். இந்நிலையில் நேற்று மாணவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீன் கிடைத்ததை அடுத்து சிறையிலிருந்து மாணவர்கள் இன்று வெளியே வந்தனர். சிறையிலிருந்து வெளியில் வந்த மாணவர்களை, மக்கள் அதிகாரம் பாடகி லதா, அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் ராஜா, கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவா மற்றும் மாணவர்களின் பெற்றோர் சிறை முன்பு கூடி நின்று வரவேற்றனர். அப்போது சின்னக் குழந்தை ஒன்று வேகமாக ஓடி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கியது. மேலும் சிறையிலிருந்து மீண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மாணவர்கள்

இறுதியாகப் பத்திரிகையாளர்களிடம் பேசிய தினேஷ் என்பவர், ``காவிரிக்காகப் போராடிய எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்த தமிழக அரசு எங்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது. தனித்தனியே கிடந்த எங்களை ஒன்றிணைய வைத்துள்ளது இந்தச் சிறை அனுபவம். இந்த வழக்குகள் மூலம் எங்களை ஒடுக்கிவிடலாம் என நினைத்தால் அது நடக்காது. தொடர்ந்து மக்களுக்கான போராட்டங்களில் கலந்துகொள்வோம்” என்றார்.

அப்போது 2 மாணவர்களை மட்டும் சிறையிலிருந்து வெளியே அனுப்பாமல் வேறு வழக்குகளில் அவர்களைக் கைது செய்திருப்பதாகத் தகவல் வர, மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர் சாருவாகன் தலைமையிலான வழக்கறிஞர்கள் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால் திருச்சி சிறைச்சாலை பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!