வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (19/04/2018)

கடைசி தொடர்பு:17:02 (19/04/2018)

ரசிகர்களால் கரையேற முடியாமல் ஏரிக்குள் தவித்த சிம்பு!

சிம்பு

சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மற்றும் மக்கள் குரல் அமைப்பினர் மூக்கன் ஏரியைத் தத்தெடுத்து அதைச் சீரமைத்து தமிழகத்திலேயே முன்மாதிரி ஏரியாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த ஏரியை நடிகர் சிம்பு இன்று பார்வையிட வந்தார். பரிசலில் ஏரியைச் சுற்றிப் பார்த்தவர் ரசிகர்களின் உற்சாகத்தால் கரையேற முடியாமல் ஏரிக்குள் தவித்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று மதியம் காரில் நேராக மூக்கனேரிக்கு வந்தார் சிம்பு. அவர் வருவதை அறிந்து ரசிகர்கள் முன்கூட்டியே ஏரிக்குப் படையெடுத்தனர். இதையடுத்து பியூஸ் தயாராக ஏரிக்குள் பரிசல் வைத்திருந்தார். பின்னர், ஏரிக்கு வந்த சிம்பு பரிசலில் அமர்ந்து ஏரியைச் சுற்றிப் பார்த்தார். பிறகு, ஏரிக்குள் அடர்ந்த மரங்கள் சூழ்ந்துள்ள திட்டில் அமர்ந்து இளநீர் குடித்துவிட்டு மீண்டும் கரையை நோக்கி வந்தார்.

சிம்பு வந்திருப்பது காட்டுத்தீ போல பரவ ரசிகர்கள் ஏரிக்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது. சிம்பு, `5 நிமிடம் வழி விடுங்கள்; மேலே வந்துவிடுகிறேன்’ என்று கேட்டும் ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் சிம்புவை நெருங்க முயன்றார்கள். அதையடுத்து பரிசல் மீண்டும் ஏரிக்குள்ளேயே சென்று சுற்றிப்போய் மற்றொரு படிக்கட்டின் வழியாக மேலே ஏறி வந்தார்.

அப்போது சிம்புவிடம் பேசியபோது, ``காவிரி மேலாண்மை வாரிய பிரச்னையை அடுத்து என்னுடைய பேச்சைக்கேட்டு கர்நாடக மக்கள் தமிழக மக்களுக்குத் தண்ணீர் கொடுத்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஏரியைப் பற்றி நான் கேள்விப்பட்டு இங்கு பார்க்க வந்தேன். சேலம் மக்கள் இப்படிச் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.