வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (19/04/2018)

கடைசி தொடர்பு:18:34 (19/04/2018)

கட்டணம் செலுத்தாததால் கலாம் படித்த பள்ளியில் மின்சாரத்தைத் துண்டித்த தமிழக அரசு!

ராமேஸ்வரத்தில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் பயின்ற நடுநிலைப் பள்ளியில் மின்கட்டணம் கட்டப்படாததால் மின் இணைப்பை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராமேஸ்வரத்தில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் பயின்ற நடுநிலைப் பள்ளியில் மின்கட்டணம் கட்டப்படாததால் மின் இணைப்பை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அப்துல் கலாம் பயின்ற பள்ளி

ராமேஸ்வரம் வர்த்தகன் தெரு பகுதியில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தின்கீழ் இயங்கும் நடுநிலைப்பள்ளி எண் -1 செயல்பட்டு வருகிறது. 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் தனது ஆரம்ப கல்வியைக் கற்றார். இதனால் இங்கு ஆண்டுதோறும் கலாமின் பிறந்த நாளில் விழா நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள். இப்பள்ளிக்கு மின் விசிறி, நூலகம், கணிப்பொறிக்கூடம், ஆய்வகம் எனப் பல்வேறு வசதிகள் அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பள்ளிக்கான மின் கட்டணம் கடந்த 2 ஆண்டுகளாகக் கட்டப்படவில்லை எனக் கூறி ராமேஸ்வரம் மின்வாரிய ஊழியர்கள், பள்ளிக்கான மின் இணைப்பைத் துண்டித்தனர். இதுகுறித்து மின் வாரியத்தினரிடம் கேட்டபோது, ``கடந்த  2 ஆண்டுகளாகப் பள்ளிக்கான மின்கட்டணம் செலுத்தபடவில்லை. ஏற்கெனவே ஒரு முறை இதேபோல் மின் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், புதிய இணைப்பு வழங்கப்பட்டது" என்று தெரிவித்தனர். 

இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது, ``பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை அந்தந்த பகுதி உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் மூலமாக மாவட்டத் தொடக்கக் கல்வித்துறை செலுத்தும். ஆனால், டாக்டர் அப்துல் கலாம் பயின்ற புகழ் கொண்ட இந்தப் பள்ளியின் மின் கட்டணத்தைப் புதிய மின் இணைப்பு பெற்று 2 ஆண்டுகள் வரை ஏன் செலுத்தாமல் அலட்சியமாக இருந்தார்கள் எனத் தெரியவில்லை. கடும் கோடை வெயிலின் தாக்கத்தில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடும் அவதியுடன் ஆண்டு இறுதித் தேர்வை எழுதினர்" என்றனர்.