சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்! தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர் சிக்கினார் | The head constable Saravanan arrested in case of child sexual harassment

வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (19/04/2018)

கடைசி தொடர்பு:20:32 (19/04/2018)

சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்! தலைமறைவாக இருந்த தலைமைக் காவலர் சிக்கினார்

ராமேஸ்வரத்தில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தனிப்பிரிவு தலைமைக் காவலர் சரவணனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ராமேஸ்வரத்தில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தனிப்பிரிவு தலைமைக் காவலர் சரவணனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த தலைமை காவலர் சரவணன்ராமேஸ்வரத்தில் தனிப்பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த சரவணன் (44). ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வரும் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அவர்களது உறவினர்களை ராமேஸ்வரம் கோயிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்து வைக்கும் பணிதான் இவரது பிரதானப் பணியாகும். கடந்த 4 ஆண்டுகளாகத் தனிப்பிரிவில் பணியாற்றி வரும் சரவணன் இங்குள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் மற்றொரு காவலர் ஒருவரின் மகளான 10 வயதுச் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் தனிப்பிரிவில் பணியாற்றிய சரவணனை வெளியூறுக்கு மாறுதல் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டார்.

இந்நிலையில் சரவணனின் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமியின் தாய் கிருஷ்ணவேணி ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் சரவணனின் மீது புகார் அளித்தார். இதையடுத்து சரவணன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்ய முயன்றனர். ஆனால், தன் மீது புகார் கொடுக்கப்பட்டதை அறிந்த சரவணன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து தலைமறைவான தலைமைக் காவலர் சரவணனை ராமேஸ்வரம் நகர் காவல் நிலைய போலீஸார் தேடி வந்தனர்.

 இதனிடையே, ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் கிராமத்தில் தலைமறைவான சரவணன் பதுங்கியிருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் அங்கு சென்று சரவணனைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரவணன் விசாரணைக்காக ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டார். விசாரணைக்குப் பின் சரவணனை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.