வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (19/04/2018)

கடைசி தொடர்பு:21:00 (19/04/2018)

மீனவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு - கைவிடப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்..!

வரைவு கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் பல்வேறு தகவல்களை மறைக்கப்பட்டு வெளியிடப்பட்டதால் கருத்துக் கேட்பு கூட்டத்தினை நடத்த மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் ராமநாதபுரத்தில் இன்று நடக்கவிருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஒத்திவைத்தார்.

வரைவு கடற்கரை மேலாண்மைத் திட்டத்தில் பல்வேறு தகவல்களை மறைக்கப்பட்டு வெளியிடப்பட்டதால் கருத்துக் கேட்பு கூட்டத்தினை நடத்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராமநாதபுரத்தில் இன்று நடக்கவிருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஒத்திவைத்தார்.

மீனவர்கள்  

2011 கடலோர மேலாண்மை ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகள் குறித்த வரை படங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தயாரிக்கப்படுகிறது. ஆந்திரா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இதற்கென மாநில அரசுகள் தனி வாரியம் அமைத்துள்ளன. ஆனால், தமிழகத்தில் சுற்றுச்சூழல் துறையினரே இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். இத்துறையினரால் தயாரிக்கப்பட்ட கடலோர வரைபடம் கடந்த மாதம் 19-ம் தேதி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 
அதன்படி கடல்வாழ் உயிரினங்கள் நிறைந்த கடலோரப் பகுதிகளை வளர்சிக்கான பகுதிகளாக மாற்றிட முயற்சி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடல் வாழ் உயிரினங்கள் வாழ்விட பகுதிகளை, குறிப்பாக கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்ட 60 இடங்களை இந்த வரைபடத்தில் காண்பிக்காமல் மறைத்து விட்டதாகக் குற்றம்சாட்டி ராமநாதபுரத்தில் நடந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
மாவட்ட ஆட்சியர் நடராஜன், சுற்றுச்சூழல் மாவட்ட பொறியாளர் லிவிங்ஸ்டன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி ஆகியோர் கருத்துக் கேட்பு கூட்டத்தினை தொடக்க முயன்ற நிலையில் அரங்கில் கூடியிருந்த மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பாலுச்சாமி, செந்தில்வேல், சிவாஜி உள்ளிட்டோர் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாகக் கூட்டத்தில் பங்கேற்ற பெண்களும் வரைவு திட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்பினர். இதனால் வேறு வழியின்றி கருத்துக் கேட்பு கூட்டத்தினை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர் வெளியேறிச் சென்றார். இதனால் கருத்துக் கேட்பு கூட்டம் கூடாமலே கலைந்தது.