`ஸ்டெர்லைட்டை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாநில அரசு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதில் சில அனுமதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி நிரந்தரத் தீர்வு காணப்படும் எனச் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் மூலமாக 2.22 ஏக்கர் பரப்பளவில், ரூ.8 கோடி மதிப்பீட்டில் 92 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் கடம்பூர் ராஜூ, ``அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டாலும், அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து காவல்துறை மூலம் விசாரணை நடத்தி வருகிறது. நிர்மலாதேவியுடன் தொலைபேசி பேசியவர்களின் எண்களை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் அரசு மெத்தனமாக இல்லை. 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாநில அரசு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதில் சில அனுமதி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி நிரந்தரத் தீர்வு காணப்படும். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, ஆலைக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமத்தினை ரத்து செய்து முடக்கி வைத்துள்ளது. இதற்கான சட்டப்பூர்வ பணிகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.  

கடம்பூர் ராஜூ

துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் அதிகாரம் மீறவில்லை. காலம் காலமாக உள்ள மரபினைத்தான் செய்து வருகிறார். தி.மு.க ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர் சிறையில் உள்ளார். முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்தில்தான் மின்வெட்டு அதிகமாக இருந்தது. அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறி உள்ளது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. குஜராத்திற்கு அடுத்தப்படியாக காற்றாலை மின்சார உற்பத்தில் தமிழகம்தான் உள்ளது. அவர்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அவலங்களை மறைக்க அரசியலுக்காக மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க., மீது குற்றம் சாட்டுகிறார்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!