`ஹெச்.ராஜா ஒன்றும் மனநோயாளி இல்லை' - முத்தரசன் கடும் தாக்கு..! | mutharasan slams h raja in kanimozhi issue

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (20/04/2018)

கடைசி தொடர்பு:07:13 (20/04/2018)

`ஹெச்.ராஜா ஒன்றும் மனநோயாளி இல்லை' - முத்தரசன் கடும் தாக்கு..!

துணைப் பேராசிரியை  நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர்  பெயரும் பயன்படுத்தப்பட்டிருப்பதால் அந்தப் பதவிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளுநர்  தனது பதவியைத் தானாக முன் வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

முத்தரசன்

பல்வேறு நிகழ்ச்சிகளில் மற்றும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று புதுக்கோட்டை வந்திருந்தார். மாலை நேரம் திலகர் திடல் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 23-ம் தேதி தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டத்தில் பா.ஜ.க-வின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. 

அருப்புக்கோட்டை துணைப் பேராசிரியர் விவகாரத்தில் மிக வெளிப்படையாகவே ஆளுநரின் பெயர்  அடிபடுகிறது. அவரும் அவசர அவசரமாக விசாரணை கமிஷன் அமைத்திருப்பது ஏற்கக்கூடியது அல்ல. இந்த விவகாரத்தில் துணைப் பேராசிரியர் ஒரு அம்புதான். இவர் யாருக்காக இந்த வேலைகளைச் செய்தார் என்று விசாரணையில் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர் பெயரும் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தப் பொறுப்புக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் தானாக முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது குடியரசுத் தலைவர் ஆளுநரைத்  திரும்ப பெற வேண்டும்.

இந்த விவகாரத்தைத் திசை திருப்பும் விதமாகவும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் தொடர்ந்து பேசி வரும் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சிலர் கூறுவதைப் போல மனநோயாளி அல்ல. விளம்பரத்துக்காகவே சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி வருகிறார். அவரைத் தமிழக அரசு உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும். மேலும், மாநிலத் தலைமை அவரைக் கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் அவர் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருப்பது பொறுப்பற்ற செயல். 

தகுதி இல்லாதவர்கள் அனைவரும் தமிழகத்தில் அமைச்சர்களாக உள்ளதால், இதுபோன்ற கருத்துகளைப் கூறுகின்றனர். லோக்ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்தினால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்பதால்தான் தமிழக அரசு லோக்ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வர அச்சப்படுகிறது. உடனடியாக இந்தச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். தற்போது தமிழக பிரச்னைகளுக்காக தி.மு.க-வுடன் ஒன்று சேர்ந்துள்ள கட்சிகள் தேர்தல் நேரத்தில் கூட்டணியாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். பா.ஜ.க மத்தியில் பொறுப்பு ஏற்ற பிறகு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. கர்நாடகாவில் பா.ஜ.க தோல்வியைச் சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்றார்.