``காவிரி உரிமை மீட்புக்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்தப்போகிறோம்” - பெ.மணியரசன் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகத் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தற்போது சூடுபிடித்துள்ள பேராசிரியை நிர்மலாதேவி-ஆளுநர் சர்ச்சையை நோக்கி தமிழக மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, மத்திய மாநில அரசுகள் முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனாலும், காவிரிக்காக உணர்வுடன் போராடும் தலைவர்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையோடும் இருக்கிறார்கள்.  

காவிரி போராட்டம் குறித்து மணியரசு

தஞ்சாவூரில் உள்ள பெசன்ட் அரங்கத்தில் ஏப்ரல் 21-ம் தேதி பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயச் சங்கங்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தி, காவிரி உரிமை மீட்புக்கான தொடர் போராட்டங்களை நடத்த, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டமிட்டுள்ளார். இது குறித்து நம்மிடம் பேசியபோது, ‘காவிரி உரிமைப் போராட்டத்தில் மக்களின் பக்கம் தமிழக அரசு நிற்க வேண்டும். வன்முறை நடந்தால், அரசு நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஆனால், ஐபிஎல்-லுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை பைபர் தடிகளால் தாக்குகிறது. இத்தாக்குதலால் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், இதைத் திசைதிருப்ப, காவல்துறையினர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் பரப்பப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்மான உணர்வே இல்லாமல் பிரதமர் மோடியிடம் மீண்டும் மீண்டும் மனு கொடுக்கிறார். காவிரி உரிமை மீட்புக்கான போராட்டங்களை தீவிரப்படுத்தப் போகிறோம். தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். பெரும் மக்கள் திரளோடு எழுச்சியுடன் இப்போராட்டங்களை நடத்துவதற்கான விரிவான ஆலோசனைக் கூட்டம், ஏப்ரல் 21-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது'' என்றார். நிர்மலா தேவி விவகாரத்தால் மக்களின் கவனம் திசை திரும்பியுள்ளதால், தமிழ்நாட்டில் இனி காவிரிப் போராட்டம் பெரிய அளவில் நடைபெற வாய்ப்பில்லை என மத்திய மாநில அரசுகள் நினைத்திருந்த நேரத்தில், காவிரி உரிமை மீட்புக் குழுவினரின் தற்போதைய அறிவிப்பு,  ஆட்சியாளர்களைக் கலக்கமடையச்செய்துள்ளது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!