கோவையைப் பதறவைத்த அரிவாள் வெட்டு சம்பவம்!

கோவை சிவானந்த காலனி, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவர், இந்துக்களை மதம் மாற்றும் பணியில் ஈடுபட்டுவருவதாகக் கூறி, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் என்று அறியப்படும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் மோதல் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த தங்கராஜ்

இந்நிலையில், இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி, கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ராதாகிருஷ்ணன், தங்கராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளார். தலையில் காயமடைந்த தங்கராஜ், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இந்நிலையில், ராதாகிருஷ்ணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வலியுறுத்தி, தங்கராஜின் உறவினர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.       

இதுகுறித்து தங்கராஜின் மகன் ஜோஸ்வா கூறுகையில், "எனது அப்பாவை சர்ச்சுக்கு செல்லக் கூடாது  என்று பலமுறை இதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மிரட்டிவந்தார். மேலும், இந்து மதத்துக்குத் திரும்பச் சொல்லியும் வற்புறுத்திவந்தார். ஆனால், நாங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், எனது தந்தையை அரிவாளால் வெட்டிவிட்டு, எங்கள் வீட்டுக்கு வந்து, 'நீங்கள் இந்து மதத்துக்கு மாறவில்லை என்றால், உங்கள் அனைவரையும் கொலை செய்துவிடுவேன்' என்று மிரட்டி சென்றார்.” எனக் கூறினார்.

இதனிடையே, தங்கராஜை வெட்டிய ராதாகிருஷ்ணன், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் 8 ஆண்டுகளாக கட்சியுடன் எந்தத் தொடர்பிலும் இல்லை எனவும் பா.ஜ.க-வினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், தங்கராஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் இருவரும் உறவினர்கள் என்றும், குடும்பத் தகராறு காரணமாக மோதல் ஏற்பட்டதாகவும் போலீஸார் தரப்பில் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!