லஞ்சம் கொடுக்காததால் டிராக்டர் டயர்களைப் போலீஸார் கழற்றிவிட்டனர்..! புலம்பும் விவசாயி

மணல் அள்ள 20,000 ரூபாய் லஞ்சம் தராததால், தனது டிராக்டரை சேதப்படுத்தியதோடு டிராக்டரின் நான்கு வீல்களையும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கழற்றிச் சென்றுவிட்டதாக, விவசாயி ஒருவர் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார். 

 

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது, தே.இடையப்பட்டி கிழக்கு கிராமம். இந்தக் கிராமத்தில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்கிற விவசாயி, வயல் வேலைக்காக சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளார். இவர், தனது சொந்தத் தேவைக்காக அங்குள்ள பொன்னியாறு அணையில் சிறிதளது மணல் எடுத்துள்ளார். அதோடு, அங்குள்ள கனவாயில் துப்பாக்கி சுடும் மைதானம் அமைக்கப்படுகிறது. அதற்கு மண் அடிக்க, இவரது டிராக்டரையும் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையில், இவரது டிராக்டரைப் பயன்படுத்த பாலவிடுதி காவல்நிலைய உளவுத்துறை ஏட்டு, மயில் மற்றும் அங்குள்ள போலீஸார் சிலர் 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தரவில்லை என்பதற்காக, அவரது டிராக்டரைச் சேதப்படுத்தியதோடு, டிராக்டரின் வீல்களையும் கழட்டிச் சென்றுவிட்டதாக ராமகிருஷ்ணன் புலம்பிவருகிறார்.

இதுதொடர்பாக அவரிடம் பேசினோம். 'உளவுத்துறை ஏட்டு மயிலும், இன்னும் சில போலீஸாரும் வந்து,  'மணல் அள்ளியதற்கும், துப்பாக்கி சுடும் மைதானம் அமைக்க டிராக்டரை வேலைக்கு அனுமதிக்கவும் 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அதுக்கு நான், 'எதுக்கு உங்களுக்கு லஞ்சம் தர வேண்டும்? அதெல்லாம் தர முடியாது'ன்னு சொன்னேன். உடனே, 'லஞ்சம் தரலன்னா உன் டிராக்டரை கொளுத்திவிடுவேன். உன் மேல பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளிருவேன்'னு மிரட்டினார்.

அதுக்குப் பயந்து, கடன் வாங்கி 15,000 ரூபாய் பணத்தை லஞ்சமா கொடுத்தேன். ஆனால், மீதி 5000 ரூபாய் கேட்டு தொடர்ந்து மிரட்டினார். என்னால பணம் ரெடி பண்ண முடியலை. அதனால், போலீஸோடு வந்து வீட்டுல நின்ன என் டிராக்டரை அடிச்சு சேதப்படுத்தியதோடு, டிராக்டரில் இருந்த நான்கு வீல்களையும் கழற்றிக்கிட்டுப் போயிட்டார். நான் தடுத்தபோது, என்னைத் தள்ளிவிட்டுட்டு வீல்களைக் கழற்றிக்கொண்டு போயிட்டார். இந்த டிராக்டரை நம்பித்தான் என் பொழப்பு ஓடுனுச்சு. அது இல்லாததால வருமானம் போச்சு. என் டிராக்டர் வீல்கள் திரும்பக் கிடைக்கணும். சேதப்படுத்தப்பட்ட டிராக்டரை சரி பண்ணித் தரணும். மயில் மேல நடவடிக்கை எடுக்கணும். இல்லைனா, குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்குவோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!