`போலி உரத்தால் மண்ணின் சத்து போய்விடும்; விளைச்சல் குறையும்' - கொந்தளிக்கும் கோவில்பட்டி விவசாயிகள்

கோவில்பட்டியில் விவசாயிகளுக்கு போலி உரம் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, போலி உரம் விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போலி உர மூட்டையுடன் விவசாயிகள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில், போலி உரம் விற்பனைசெய்யும் கடைகளின் உரிமத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி, போலி உர மூட்டையுடன் விவசாயிகள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். 

farmers protest against sold for duplicate fertilizer

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில், அதிக அளவில் போலி உரங்கள் விற்பனைசெய்யப்படுவதாக விவசாயிகள், விவசாயச் சங்க அமைப்புகள், வேளாண்மைத்துறை அதிகாரிகளிடமும் ஆட்சியரிடமும் புகார் தெரிவித்துவந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன், விளாத்திகுளம் தாலுகா நாகலாபுரத்தில், தனியார் உரக் கம்பெனியின் பெயரைப் பயன்படுத்தி சாம்பலும், களிமண்ணும் கலந்த போலி உர மூட்டைகள் பறிமுதல்செய்யப்பட்டன. விவசாயிகளின் தொடர் போராட்டத்தால், கடைக்காரர் மற்றும் உர ஏஜென்ஸி உரிமையாளர் ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவுசெய்யபட்டது. இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, விளாத்திகுளம் யூனியன் ஆபீஸ் வளாகத்தில் உள்ள தூத்துக்குடி பயிர் உற்பத்தியாளர் குழு கம்பெனியில், போலி களைக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கோவில்பட்டி அருகில் உள்ள குருமலையில் செயல்பட்டுவரும் ஒரு உரக்கடையில், லெட்சுமண பெருமாள் என்ற விவசாயி, தனது நிலத்திற்காக  உரம் வாங்கியுள்ளார். மூட்டையைப் பிரித்துப்பார்த்த அவர், தான் வாங்கிய உரம் போலி எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து, தமிழ் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள, கூடுதல் வேளாண்மைக் கிட்டங்கி மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகளிடம் பேசினோம், ”தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை, கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம்,  ஒட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய தாலுகாக்களில், மானாவாரியாக சோளம், மக்காச்சோளம், கம்பு, உளுந்து, பாசி, சூரியகாந்தி, வத்தல், மல்லி ஆகிய பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. தற்போது, கோடை உழவுசெய்யும் நேரத்தில் அடி உரத்தை மண்ணில் தூவி, மழை பெய்தவுடன் விதை விதைக்க விவசாயிகள் காத்திருக்கும் நேரத்தில், இவ்வாறு போலி உரம் விற்பனை செய்யப்படுவதால், மண்ணுக்குப் போதிய சத்துகள் கிடைக்காமல், விளைச்சல் குறையும். எனவே, போலி உரங்களை விற்பனைசெய்பவர்கள் மீதும், தயாரிப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து போலி உரம் வரத்து அதிகமானால், விவசாயிகள் திரண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என எச்சரித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!