தேவாரம் ஒலிக்க சிவனும் சக்தியும் வலம்வந்த வசந்த உற்சவ விழா!

புகழ்பெற்ற திருவண்ணாமலை திருக்கோயிலின் வசந்த உற்சவத் திருவிழா, நேற்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சியோடு தொடங்கியது. இது, பதினோரு நாள் விழாவாக வரும் 29-ம் தேதி வரை பல்வேறு சிறப்புப் பூஜைகள், ஆராதனைகள், வாகன உலாக்களோடு நடைபெறும். அதையொட்டி, நேற்று காலை அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் மூலவர், உற்சவர் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றன. பின்னர், வேதமந்திரங்கள் ஓத, மலர் தூவி கோயிலின் இரண்டாம் சுற்றில் பந்தக்கால் நடப்பட்டது. இந்த விழாவின் சிறப்பம்சமாக, அண்ணாமலையாருடன் உண்ணாமலையம்மனும் இணைந்து, தினந்தோறும் திருக்கோயிலின் வெளிச்சுற்றில் உள்ள தல விருட்சமான மகிழ மரத்தை 10 முறை சுற்றிவருவார்கள்.

திருவண்ணாமலை

அப்போது, மங்கள இசையுடன் தேவாரம் ஒலிக்க, சிவனும் சக்தியும் வலம்வருவார்கள். வேதத்துக்கே நாயகனான ஈசன், தேவாரத்தின் பெருமையை எடுத்துச்சொல்லவே இந்த சம்பிரதாயம் நடைபெறுகிறதாம். இவர்கள் வலம் வரும்போது, அலங்கார பொம்மை பூத்தூவி வணங்கும். இந்த வசந்த உற்சவ விழாவின் இறுதி நாளில், தீர்த்தவாரியும்  திருவண்ணாமலைக்குப் புகழ் சேர்க்கும் மன்மத தகனமும் நடைபெறும். சித்திரை மாத வசந்தத்தை வரவேற்கும் இந்த இனிய விழாவில், பக்தர்கள் கலந்துகொண்டு அண்ணாமலையார் உண்ணாமலையம்மனின் அருளைப் பெருங்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!