'தீ குளிப்பவர்மீது மண்ணைப் போடாதீர்கள்'- தீயணைப்புத்துறை முக்கிய அறிவுரை | Fire service advise to people

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (20/04/2018)

கடைசி தொடர்பு:12:15 (20/04/2018)

'தீ குளிப்பவர்மீது மண்ணைப் போடாதீர்கள்'- தீயணைப்புத்துறை முக்கிய அறிவுரை

இயற்கைப் பேரிடர் மீட்பு மற்றும் தீவிபத்துகுறித்த விழிப்புஉணர்வு வார நிகழ்ச்சிகள், கடந்த 14-ம் தேதியிலிருந்து 20-ம் தேதி வரை நடத்தப்பட்டன. இதில், பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளைத் தீயணைப்பு வீரர்கள் மக்கள் முன்பாக நிகழ்த்திக்காட்டினார்கள். 

தீயணைப்புத்துறை விழிப்புணர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில், தீயணைப்புத்துறையினர் தேசிய பேரிடர் வார நிகழ்ச்சிகளைக் கடந்த ஒரு வாரமாக நடத்திவருகிறார்கள். கடைசி நாளான இன்றும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளும், விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரங்களும் அறிவுரைகளும் மக்கள் கூடும் இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று (19.04.2018.), பொன்னமராவதி அருகே, கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் முன்பு உள்ள குளத்தில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், தேசிய இயற்கைப்  பேரிடர் மேலாண்மை தவிர்ப்பு ஒத்திகை, விழிப்பு உணர்வு ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெற்றன.

நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் இயற்கைப் பேரிடர்களில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது, எந்த வகையிலான முதலுதவிகள் தரவேண்டும் என்பதுகுறித்து செய்முறை நிகழ்ச்சிகளுடன் விவரித்தார்கள். நீர் நிரம்பிய கோயில் குளத்தில் நான்கு  மாணவர்களை, வீரர்களின் ஒத்துழைப்புடன் தத்தளிக்கச் செய்து, அவர்களை மீட்டு, பாதுகாப்பாக கரையில் சேர்க்கும் ஒத்திகைப் பயிற்சி, மக்கள் முன்பாக நிகழ்த்திக்காட்டப்பட்டது. பின்பு, விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில், ஏராளமான பொதுமக்கள் பாதுகாப்புகுறித்த சந்தேகங்களைக் கேட்டறிந்தனர். அதில் மிக முக்கியமானது, வீடுகளிலோ, பொது இடங்களிலோ திடீரென தீ குளிப்பவர்களை எப்படிக் காப்பாற்ற வேண்டும்; அப்படியான முயற்சிகளில், நம்மை தீ பற்றிக்கொள்ளாமல் எப்படி மீட்புக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதற்கு, அலுவலர்கள் கொடுத்த விளக்கம் மிக முக்கியமானதாக இருந்தது.

தீயணைப்புத்துறை வீரர்கள்

"பொருள்கள் தீப்பற்றி எரிவதற்கும், ஒரு மனிதர் தீ வைத்து எரித்துக்கொள்வற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். பொருள்களும் மனிதர்களும் தீப்பிடித்து எரிந்தால், நமது மக்கள் மண்ணை வாரிப் போடுகிறார்கள். பொருள்கள்மீது இப்படி மண்ணைக் கொண்டு தீயை அணைப்பதில் தவறேதும் இல்லை. அதுதான் சரியான முறையும்கூட. ஆனால், மனிதர்கள்மீது தீவிபத்து ஏற்பட்டாலோ அல்லது தீ குளித்தாலோ அவர்கள்மீது மண்ணை வாரிக் கொட்டுவது மிக மிகத் தவறானது. சம்பந்தப்பட்டவர்களின் உடலுக்குள் மண் சென்று, கூடுதலான வேதனையையும் உயிருக்கு ஆபத்தான சூழலை விரைவுபடுத்தும். ஆகவே, அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டாம். சாக்கு, போர்வை மாதிரியான அழுத்தமான பொருள்கள்மூலமாக தீப்பிடித்த நபர்மீது சுற்றிப்போட்டு, தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும். தீயை அணைத்த பிறகு, சிகிச்சைக் காரியங்களை விரைந்து செய்ய வேண்டும்" என்றார்கள்.