நிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம்! சிக்கும் சென்னை ஐஏஎஸ் அதிகாரி | Shocking storybehind Nirmala devi's arrest

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (20/04/2018)

கடைசி தொடர்பு:18:49 (20/04/2018)

நிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம்! சிக்கும் சென்னை ஐஏஎஸ் அதிகாரி

நிர்மலா தேவி

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில், ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் பெயர் அடிபடுகிறது. இதனால், அவரிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவுசெய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை விரிவடைந்துள்ள நிலையில், பல முக்கியத் தகவல்கள் தினமும் போலீஸாருக்குக் கிடைத்த வண்ணம் உள்ளன. நிர்மலா தேவியைத் தவிர, இந்த வழக்கில் சந்தேகப்படும் நபர்கள் யார் யார் என்ற பட்டியலை சி.பி.சி.ஐ.டி போலீஸார் ரகசியமாகத் தயாரித்துவருகின்றனர்.

போலீஸாரின் சந்தேகப் பட்டியலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, நிர்மலா தேவியுடன் தினமும் போனில் பேசும் மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தில் உள்ள சிலரின் மீதும் போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. அவர்கள், போலீஸாரின் ரகசியக் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். இந்த நிலையில், நிர்மலா தேவிக்கு  விவிஐபி-க்களை அறிமுகப்படுத்திய முக்கியமான நபர்குறித்த ரகசியத் தகவல், சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. அந்த நபர், தற்போது சென்னையில் முக்கியப் பதவியில் பணியாற்றுகிறார். அவரிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசித்துவருகின்றனர். 

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "நிர்மலா தேவி வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. அதே நேரத்தில், பல கோணங்களில் எங்களது விசாரணை நடந்துவருகிறது.  நிர்மலா தேவியுடன் பணியாற்றிய பேராசிரியர்கள், அவருடன் நட்பில் இருந்தவர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோரிடம் முதற்கட்ட விசாரணை நடந்துமுடிந்துள்ளது. அடுத்தகட்டமாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலா தேவிக்கு பக்கப்பலமாக இருந்தவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.

கல்லூரி நிர்வாகத்திடம் நடத்திய விசாரணையில்,  நிர்மலா தேவியை இந்தப் பணியில் சேர்க்க சிபாரிசுசெய்தவர்கள் முதல் அவருடன் தொடர்ந்து 10 ஆண்டுகளாக நட்பில் இருந்தவர்கள்குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணைக்குத் தயாராகிவருகிறோம். சம்பந்தப்பட்ட கல்லூரியில், மூன்றாம் ஆண்டு பயிலும் நான்கு மாணவிகளிடம் தனித்தனியாக பெண் போலீஸ் டீம் மூலம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர்கள் கொடுக்கும் வாக்குமூலம், இந்த வழக்கின் முக்கிய ஆவணமாகும். அதே நேரத்தில், நிர்மலா தேவியை போலீஸ் காவலில் எடுக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். அதன்பிறகு நடத்தப்படும் விசாரணையில் இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டராகப் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவருடன் நிர்மலா தேவிக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. அவருடன் அடிக்கடி போனில் பேசியிருக்கிறார்.  அதற்கான ஆதாரங்களைச் சேகரித்துவருகிறோம். சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி, சென்னையில் முக்கிய பதவியில் இருக்கிறார். அவரும் எங்களின் சந்தேகப் பட்டியலிலிருக்கிறார். இருப்பினும், அவரிடம் விசாரிக்க மேலிட அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். கிரீன் சிக்னல் கிடைத்தவுடன், அவரிடம் விசாரணை நடத்தப்படும். 

  
இந்த நிலையில், நிர்மலா தேவியின் குடும்பப் பின்னணிகுறித்து விசாரிக்க ஒரு டீம் களமிறக்கப்பட்டுள்ளது. அந்த டீம், அவரது உறவினர்களிடம் விசாரித்துவருகிறது. நிர்மலா தேவி வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள், தினமும் ரிப்போர்ட் கொடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு விசாரணையின் ரிப்போர்ட் அடிப்படையில்தான் அடுத்தகட்ட விசாரணையை நடத்த திட்டமிட்டுள்ளோம்.  இந்த வழக்கு முக்கியமானது என்பதால், முழு விவரங்களையும் வெளியில் சொல்ல முடியாது" என்றார். 

யார் அந்த ஐஏஎஸ் அதிகாரி என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, மீடியாக்களின் சமீபத்திய ஹாட் டாபிக் நாயகர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்ற தகவல் மட்டும் கிடைத்தது.