சூரப்பா நியமன விவகாரம்! - ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விஜயகாந்த், பிரேமலதா கைது | DMDK protest against Governor's appointment of Anna University Vice chancellor

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (20/04/2018)

கடைசி தொடர்பு:13:10 (20/04/2018)

சூரப்பா நியமன விவகாரம்! - ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விஜயகாந்த், பிரேமலதா கைது

பா.ஜ.க அரசு தொடர்ச்சியாகத் தமிழக அரசுக்கு துரோகம் செய்துவருகிறது என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா நியமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க-வினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். 

விஜயகாந்த்

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்தார். அவரது, நியமனத்துக்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ச்சியாக வெளிமாநிலத்தவர்களை நியமனம் செய்தவதாக எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில், சூரப்பா நியமனத்தைக் கண்டித்தும் அந்த நியமனத்தை நீக்கக்கோரியும் விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள பனகல் மாளிகையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை, காவல்துறையினர் தடுப்புகள் வைத்து தடுத்தனர். அதனால், காவல்துறையினருக்கும் தே.மு.தி.க-வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் விஜயகாந்த், `பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பா.ஜ.க எம்.பி, எல்.ஏல்.ஏ-க்கள் முதல் இடத்திலுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சூரப்பா நியமனம் தேவையா, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடிக்கிறது. பா.ஜ.க அரசு தொடர்ச்சியாகத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்துவருகிறது' என்று தெரிவித்தார். 

பின்னர், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட தே.மு.தி.கவினர் கைது செய்யப்பட்டனர்.