“எஸ்.வி.சேகரின் பதிவு அருவருக்கத்தக்கது!” - கனிமொழி காட்டம் | kanimozhi condemns on s.v.sekar post about women journalist

வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (20/04/2018)

கடைசி தொடர்பு:13:19 (20/04/2018)

“எஸ்.வி.சேகரின் பதிவு அருவருக்கத்தக்கது!” - கனிமொழி காட்டம்

பெண் பத்திரிகையாளர்கள் பற்றி எஸ்.வி.சேகரின் கருத்துக்கு தி.மு.க எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமொழி

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். சந்திப்பு முடிவடைந்த  பின், மீண்டும் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் கன்னத்தைத் தட்டிவிட்டுப் பேசியுள்ளார். இந்தச் சம்பவம் அரசியலில் பெரும் சர்ச்சையாகப் பேசப்பட்டது. ஆளுநருக்கு பல அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கண்டங்களைத் தெரிவித்ததை அடுத்து, அந்தப் பெண் நிருபரிடம் ஆளுநர் மன்னிப்புக் கேட்டார்.

ஆளுநரின் செயல்குறித்து முகநூல் பக்கத்தில் பல கருத்துகள் உலா வந்தன. அதில், ஆளுநருக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல கருத்துகள் பதிவிடப்பட்டன. இந்நிலையில், ஆளுநரிடம் கேள்விகேட்ட பெண் நிருபருக்கு எதிராகவும், ஊடகங்களுக்கு எதிராகவும்  தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி, நேற்று ஒரு நபர் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார், அந்தக் கருத்தை     பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் பகிர்ந்திருந்தார். பதிவிட்டவரைவிட, எஸ்.வி.சேகரின் பகிர்வுக்குப் பிறகு, அந்தக் கருத்து ஊடகத்தினரிடமும் பெண்கள் அமைப்பினர், பெண் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் எதிர்ப்பை அடுத்து, எஸ்.வி.சேகர் அந்தக் கருத்தை தனது முகநூல் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.

இவரின் இந்தக் கருத்துக்கு தி.மு.க எம்.பி., கனிமொழி கண்டனம் தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ ஊடகத் துறையில் உள்ள பெண்கள்குறித்த பி.ஜே.பி உறுப்பினர் எஸ்.வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது. கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்படவேண்டியது. மற்றொருவரின் பதிவை நான் பகிர்ந்தேன் என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. அந்த முகநூல் பதிவு, அருவருக்கத்தக்க மனநிலையையே காட்டுகிறது. இப்படிப்பட்ட பதிவுகளைப் போட்டுவிட்டு, கண்டனம் எழுந்ததும் நீக்குவது தொடர்கதையாகிவருகிறது. பி.ஜே.பி தலைமை, எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இத்தகைய கருத்துகளுக்கு அவர்களும் உடன்படுகிறார்கள் என்றே பொருள்கொள்ள முடியும். இத்தகைய கருத்துகள், அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என்று கூறிவிட்டு, அவரை கட்சியில் தொடர அனுமதிப்பது தவறு. அனைத்துப் பெண் பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


[X] Close

[X] Close