வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (20/04/2018)

கடைசி தொடர்பு:14:20 (20/04/2018)

`சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்

'சமூக வலைதளங்களில் அவதூறாகக் கருத்து பதிவிட்ட ஹெச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்யும்' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, இரு தினங்களுக்கு முன்னர் கருணாநிதி குறித்தும் கனிமொழி குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவருக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில்,  திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர், ஊடகவியலாளர்கள்குறித்து கொச்சையாகப் பதிவிட்டுள்ளார். இதற்குக் கண்டனங்கள் எழுந்துவருகின்றன. இந்த விவகாரம்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகிய இரு சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து. இவர்கள் இருவர் மீதும் தமிழக அரசே முன்வந்து வழக்குத் தொடரும். சர்ச்சைக்குரிய கருத்துகள்மூலம் விளம்பரம் தேடுவதே இருவருக்கும் வேலை. பேராசிரியை விவகாரத்தில் காவல்துறை உண்மை நிலையை வெளிக்கொண்டுவரும். யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை'' என்று தெரிவித்தார்.