`தரமில்லாத ஒரு அரசியல்வாதி’ - ஹெச்.ராஜாவை விமர்சிக்கும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

``ஹெச்.ராஜா ஒரு தரமில்லாத அரசியல்வாதி” எனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

நாராயணசாமி

புதுச்சேரி, கதிர்காமத்திலுள்ள இந்திராகாந்தி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். மாணவிகளின் கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கிய அவர், விழாவின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால்தான் தற்போது நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வடமாநில ஏ.டி.எம் மையங்களில் கடுமையான பணத்தட்டுபாடு ஏற்பட்டிருப்பதால் மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரி ஏ.டி.எம் மையங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி மற்றும் நிதித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத இருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ``ஹெச்.ராஜா தரம் இல்லாத அரசியல்வாதி. தனிப்பட்ட முறையில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சிப்பதன் மூலம் அவர் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என நினைக்கிறார். தி.மு.க தலைவர் கருணாநிதியையும் கனிமொழியையும் தரம் தாழ்த்திப் பேசிய ஹெச்.ராஜாமீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெச்.ராஜா எதைப் பேசி திசை திருப்பினாலும் தமிழகத்தின் பிரச்னைகள் நீர்த்துபோகாது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!