`நீலகிரியில் அணை கட்ட முடியுமா என ரகசியமாக ஆய்வு செய்யுங்கள்’ - அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு | TN CM EPS ordered officials, to review the possibilities of construct dam in the Nilgiris

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (20/04/2018)

கடைசி தொடர்பு:15:20 (20/04/2018)

`நீலகிரியில் அணை கட்ட முடியுமா என ரகசியமாக ஆய்வு செய்யுங்கள்’ - அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

நீலகிரியிலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் நதியில் அணை கட்ட முடியுமா என ரகசியம ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழனிசாமி

காவிரி விவகாரம் தமிழகத்தும் கர்நாடகாவுக்கும் இடையே பெரும் மோதல்களைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இரு மாநிலத்துக்கும் இடையே சர்ச்சை நிலவி வருகிறது. இதனால் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை இங்கிருந்தே எப்படிப் பெறுவது என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்து வருகிறார். 

நீலகிரி மலைப்பகுதிகளிலிருந்து உற்பத்தியாகும் சிறிய ஆறுகள் ஒன்று சேர்ந்து தமிழகத்துக்கு ஒரு பகுதியும் கர்நாடகாவுக்கு மற்றொரு பகுதியும் பாய்வதாகக் கூறப்படுகிறது. உண்மையில் நீலகிரியில் உள்ள ஆறுகள் கர்நாடகாவுக்கு செல்கிறதா என்பதை ஆய்வு செய்து, அவ்வாறு சென்றால் அதை கர்நாடகாவுக்குச் செல்லாதவாறு தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குத் திருப்பி விடுவது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதிகளில் அணை கட்டுவதன் மூலம் கர்நாடகத்துக்குச் செல்லும் நீரைத் தடுப்பதுடன், தமிழகத்துக்குத் தேவைப்படும் நீரையும் பெற முடியும். இது குறித்து ரகசியமாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பொதுப்பணித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் காவிரி விவகாரம் தொடர்பாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நீலகிரி மலைப் பகுதிகளில் ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.