தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்ற 65 பேர் கைது

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 4 பெண்கள் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேர் கைதுசெய்யப்பட்டனர். 

ஸ்டெர்லைட்

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இக்கிராமத்தைத் தொடர்ந்து பண்டாரம்பட்டி, சங்கரப்பேரி, மீளவிட்டான், சில்வர்புரம் உள்ளிட 16 கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மாணவர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் எனப் பல தரப்பினரும் ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். 

DYFI protest against sterlite industty

இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஃப்.சி.ஐ. குடோன் அருகில் ஒன்றுகூடி,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். பிறகு, அங்கிருந்து ஆலையை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர். அவர்களை, மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தினர்.  தடுப்புகளை மீறிச்செல்ல அவர்கள் முற்பட்டனர். இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும்  இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்கள் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 65 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் ரெஜிஸ்குமார், "லாப வெறியில் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். இந்த ஆலையின் கழிவால், பல்வேறு நோய்கள் ஏற்பட்டுவருகிறது. அடுத்த தலைமுறையின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், இந்த ஆலை மூடப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்துப் பாதுகாக்கும் காவல்துறை, இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?  இந்த ஆலைக்கு எதிராகப் போராடிவரும் மாணவர்களைக் கைதுசெய்த காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!