``சட்டரீதியாகச் சம்மட்டி அடி கொடுப்போம்!” - எஸ்.வி.சேகரை சாடும் புதுச்சேரி செய்தியாளர் சங்கம் | Puducherry press association Condemned S.Ve.Shekar

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (20/04/2018)

கடைசி தொடர்பு:15:38 (20/04/2018)

``சட்டரீதியாகச் சம்மட்டி அடி கொடுப்போம்!” - எஸ்.வி.சேகரை சாடும் புதுச்சேரி செய்தியாளர் சங்கம்

``சட்டரீதியாகச் சம்மட்டி அடி கொடுப்போம்” என எஸ்.வி.சேகருக்கு புதுச்சேரி செய்தியாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எஸ்.வி.சேகர்

திரைப்பட நடிகரும் பா.ஜ.க-வின் உறுப்பினர்களில் ஒருவருமான எஸ்.வி.சேகரின் முகநூல் பக்கத்தில், பத்திரிகையாளர்கள் மற்றும் பெண் பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்து பதிவு செய்யப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து புதுச்சேரி செய்தியாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டி.சிவா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆளுநர் விவகாரத்தில் நடைபெற்ற தவறுக்கு அவரே வருத்தம் தெரிவித்த பின்பு, அவருக்காக வக்காலத்து வாங்கும் எஸ்.வி.சேகர் அவர்களே, நீங்கள் சார்ந்த கட்சியில் பலனை அடைவதற்கு எதையாவது செய்யுங்கள். ஏனென்றால் நீங்கள் நடிகர்தானே..? ஆனால், ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்தி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருகின்றேன் என்று எத்தனையோ பேர்கள், எத்தனையோ பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து உள்ளார்கள். இது வழக்காகவும் கதையாகவும், திரைப்படமாகவும் வந்துள்ளது. அதில் நீங்களும் ஒருவராக ஏன் இருந்திருக்கக் கூடாது என்று என்றாவது ஊடகவியலாளர்கள் உங்களைக் கேட்டது உண்டா. ஆனால், அந்தக் கூற்று உண்மைதான் என்பதை நிரூபிப்பது போல் இருக்கிறது உங்களின் பதிவு. மனிதனைப் பெற்றெடுப்பது பெண்மை. ஆனால், அந்தப் பெண்மையைக் கீழ்த்தரமாக யார் விமர்சித்தாலும் அது அவர்களின் பிறப்பையே சந்தேகிக்கக்கூடிய விஷயம். அப்படி உங்களை நினைக்க முடியுமா. எஸ்.வி.சேகர் அவர்களே உங்களின் பதிவுக்கு நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஏதோ பிரச்னையை மறைப்பதற்காக, உங்கள் தலைமை என்னென்னவோ அசைன்மென்ட் கொடுத்திருக்கலாம். அதற்காக ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்தி அதன் மூலம் பயனடையலாம் என்பது மூடத்தனம். தவித்த வாய்க்குத் தண்ணீர் கேட்டுப் போராடுவதால் இது போன்ற தரங்கெட்ட விமர்சனங்களை உம்மால் விஷமாகக் கக்கத் தொடங்கியுள்ளீர்கள். இதற்கு முடிவுகட்ட நாங்கள் தயாராகிவிட்டோம். எஸ்.வி.சேகர் அவர்களே இதோடு உங்களின் இத்தகைய செயல்களை நிறுத்திக்கொண்டு, எழுதிய வார்த்தைக்கு ஊடகவியலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், உங்களை எதிர்த்துப் போராடப்போவதில்லை. ஏனென்றால், அதற்குத் தகுதியானவர் நீங்கள் இல்லை. அதேசமயம் சட்டரீதியாக உங்களுக்கு சம்மட்டி அடி கொடுப்போம். அதை உங்களால் தாங்க முடியாது என எச்சரிக்கிறோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் எஸ்.வி.சேகர், சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க