அட்டகாசம் செய்த காட்டெருமை! - முடிவுக்கு வந்த 11 மணி நேரப் போராட்டம் | forest buffalo threatned village people

வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (20/04/2018)

கடைசி தொடர்பு:15:51 (20/04/2018)

அட்டகாசம் செய்த காட்டெருமை! - முடிவுக்கு வந்த 11 மணி நேரப் போராட்டம்

குமரி மாவட்டம் களியல் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய காட்டெருமை நேற்று நள்ளிரவு மயக்க ஊசி செலுத்தி பிடிபட்டது.

குமரி மாவட்டம் களியல் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய காட்டெருமை நேற்று நள்ளிரவு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

சிக்கிய காட்டெருமை

கன்னியாகுமரி வனப்பகுதிகளிலிருந்து காட்டு விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடையாலுமூடு பகுதியில் புலி ஊருக்குள் புகுந்து களேபரம் செய்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை களியல் பகுதியை அடுத்த ஆலஞ்சோலையில் காட்டெருமை ஊருக்குள் புகுந்தது. ரப்பர் தோட்டத்தில் பால் சேகரித்த தொழிலாளி அர்ஜூனனை காட்டெருமை தாக்கியது. அவர் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார். இதுபோல கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த விமலாராணி என்பவரும் காட்டெருமை தாக்கியதில் காயம் அடைந்தார்.

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டெருமை

நேற்று பகல் முழுவதும் காட்டெருமை ஆட்களைத் துரத்துவதும் மக்கள் சேர்ந்து காட்டெருமையைத் துரத்துவதுமாகப் பொழுது சென்றது. களியல் பகுதியில் ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று மதியம் ரப்பர் தோட்டத்தில் நின்ற காட்டெருமையை வனத்துறையினர் பட்டாசு போட்டு விரட்ட முயன்றனர். ஆனால், காட்டெருமை எதற்கும் அசராமல் ஊருக்குள் சுற்றி வந்தது. இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு நெல்லையைச் சேர்ந்த டாக்டர்கள் குழு மயக்கத் துப்பாக்கியுடன் களியல் பகுதிக்கு வந்தனர்.

ஆற்றின் மறுபக்கம் நின்ற காட்டெருமையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர். ஆனால், இரவு நேரம் என்பதாலும் மழை பெய்ததாலும் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இரவு சுமார் 11 மணியளவில் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

நெல்லையை சேர்ந்த டாக்டர்கள் குழு

சுமார் 600 கிலோவுக்கும் அதிகமான எடைகொண்ட காட்டெருமையை ஜே.சி.பி உதவியுடன் தூக்கி வாகனத்தில் ஏற்றி பேச்சிப்பாறை  காட்டுப்பகுதிக்குள் கொண்டுவிட்டனர். இதனால் சுமார் 11 மணி நேரமாகக் களியல் பகுதி கிராம மக்களுக்கு ஏற்பட்ட பதற்றம் தணிந்தது.


[X] Close

[X] Close