செயின் திருடர்களிடமிருந்து தப்பிக்க... காவல்துறை அதிகாரி சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகள்! | How to save yourself from chain-snatchers? This police official tells necessary tips!

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (20/04/2018)

கடைசி தொடர்பு:15:22 (20/04/2018)

செயின் திருடர்களிடமிருந்து தப்பிக்க... காவல்துறை அதிகாரி சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகள்!

சென்னை, அரும்பாக்கத்தில் சங்கிலித் திருடர்களால் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட மேனகா, கணவர் கண்ணெதிரே தனது தாலிச்செயினைப் பறிகொடுத்த குன்றத்தூர் ஜெயஶ்ரீ எனச் சில மாதங்களுக்கு முன்பு செயின் பறிப்பு சம்பவங்களால் சென்னையே பரபரத்திருந்தது. சற்று ஓய்ந்திருந்த நிலையில், இதோ அண்ணா நகரில் மீண்டும் கைவரிசையை ஆரம்பித்துவிட்டார்கள். அமுதா என்ற டாக்டரிடம் கத்தியைக் காட்டி செயின் பறிக்கப்பட்டுள்ளது. உடனே  டாக்டர் அமுதா, `திருடன்... திருடன்...'' என்று கூக்குரலிட்டுள்ளார். அப்போது அங்கே ஓடிவந்த 17 வயதுச் சிறுவன், துணிச்சலுடன் திருடனை விரட்டிச்சென்று செயினை மீட்டான். `என் நிறை மாத கர்ப்பிணி மனைவியை எப்போது ஹாஸ்பிடலுக்கு அழைத்து வரலாம்' என்று கேட்டுக்கொண்டு வந்தான் அந்த இளைஞன். கிளினிக்கில் நான் மட்டுமே இருக்கிறேன் என்பதை நோட்டமிட்டுச் சென்றிருக்கிறான். சற்று நேரத்தில் திரும்பி வந்தவன், கத்தியைக் காட்டி மிரட்டி என் செயினைப் பறித்தான்'' என்கிறார் டாக்டர் அமுதா.

செயின்

பைக்கில் வந்து செயினை அறுப்பது, சத்தம் எழுப்பாமல் பின்னாடியே நடந்து வந்து பறிப்பது என இருந்தவர்கள், இப்போது கிளினிக் உள்ளே நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டும் அளவுக்குத் துணிச்சல் பெற்றிருப்பது பாதுகாப்பு குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. சட்டமும் காவல்துறையும் சங்கிலித் திருடர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதுபோன்ற ஆபத்திலிருந்து தங்களையும் தங்கள் செயினையும் காப்பாற்றிக்கொள்ள பெண்கள் என்ன செய்ய வேண்டும்? சங்கிலித் திருடர்கள் எந்த மாதிரியான பெண்களைக் குறி வைக்கிறார்கள்? எந்தெந்தப் பகுதிகளில் கைவரிசையைக் காட்டுகிறார்கள்? இதுகுறித்து சொல்கிறார், காவல்துறை அதிகாரி கண்ணன்.

கண்ணன்* சங்கிலித் திருடர்கள் ஒரு ஏரியாவை பல நாள்கள் நோட்டமிட்டு, அந்தப் பகுதியில் எந்த நேரம் ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் எனத் தெரிந்துகொண்ட பிறகு கைவரிசையைக் காட்டுவார்கள்.

* கிராமப்புறங்களில் ஒரு பெண் ஓங்கிக் குரல் கொடுத்தாலே, கும்பல் சேர்ந்துவிடும். அதனால், கும்பல் அதிகம் சேராத நகர்ப்புறங்களையும், புறநகரையுமே செயின் திருடர்கள் டார்கெட் செய்கிறார்கள்.

* செயின் ஸ்நாச்சர்ஸ், தங்கள் கைவரிசையைப் பெரும்பாலும் வயதான பெண்களிடமே காட்டுகிறார்கள். அவர்கள் கழுத்தில்தான் கனமான தாலிச் சங்கிலி இருக்கும் என்பது ஒரு காரணம். அவர்களால் திருடர்களை எதிர்த்துப் போராட முடியாது என்பது இன்னொரு காரணம்.

* அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடுபவர்கள், கடைக்குப் பால் வாங்கப்போகிறவர்கள், குப்பையைக் கொட்டச் செல்பவர்கள், மதியம் மற்றும் இரவு வேளைகளில் ஆள் நடமாட்டமில்லாத தெருக்களில் நடந்துச்செல்பவர்கள் போன்ற பெண்களை அதிகம் குறி வைக்கிறார்கள்.

 * தனியாக இருக்கும் பெண்களும் இந்தப் பிரச்னையைச் சந்திக்கலாம். அவர்கள் தாங்கள் தனியாக இருப்பதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பது முக்கியம்.

 

* வீட்டுக்கு வெளியிலும் தெருக்களிலும், சி.சி.டி.வி, கேமரா பொருத்துவது அவசியம். இது, சங்கிலித் திருடர்களைப் பயப்படுத்தும். 

சங்கிலி

* தெருவில் செல்லும்போது, யாராவது உங்கள் செயினை அறுக்க முற்பட்டால், செயினை இறுக்கமாகப் பிடித்தவாறு தரையுடன் உட்கார்ந்துவிடுங்கள். இப்படிச் செய்தால், டூவீலரில் சென்றுகொண்டே செயினை அறுக்க முற்படும் திருடர்கள், பேலன்ஸ் தவறி விழுந்துவிடுவார்கள். அல்லது செயினை அறுக்க முடியாமல் ஓடிவிடுவார்கள். 

* தாலிக்கொடியை ரவிக்கையுடன் பெரிய சைஸ் சேஃப்டி பின்களால் இணைத்துவிடுங்கள். திருடர்களால் சட்டென்று செயினை அறுக்கமுடியாமல் விட்டுவிடுவார்கள்.

* அதிகமான, கனமான தங்கச் சங்கிலிகள் அணிந்துகொண்டு வெளியே செல்வதைத் தவிருங்கள்.''

வரும் முன் காப்பது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்தானே!

 


டிரெண்டிங் @ விகடன்