வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (20/04/2018)

கடைசி தொடர்பு:19:00 (20/04/2018)

12 வயதில் சின்ன கட்டி... 46 வயதில் உடல் முழுவதும் கட்டிகள்...மருத்துவ உதவிக்கு ஏங்கும் பழனிச்சாமி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள போடராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ், ராஜம்மாள் தம்பதி. இவர்களுக்கு பழனிச்சாமி, ராஜா, சிவசாமி, பச்சையம்மாள் என்ற நான்கு குழந்தைகள். பழனிச்சாமியைத் தவிர மற்ற மூவருக்கும் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், பழனிச்சாமிக்கு மட்டும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. 

மருத்துவ உதவி கோரும் பழனிச்சாமி

பழனிச்சாமிக்கு 12 வயசு இருக்குபோது சின்னச் சின்ன கட்டிகள் உடலில் உருவாக ஆரம்பித்தது. உள்ளூரில் பார்க்காத வைத்தியம் இல்லை. ஆனால், பழனிச்சாமியின் உடலில் உருவான கட்டிகளைக் குணப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் கட்டிகள் வளர்ந்து பெரிதாக வளர ஆரம்பித்ததே தவிர குணமாகவில்லை. இப்போது பழனிச்சாமிக்கு வயசு 46. உடல் முழுவதும் கட்டிகள் வளர்ந்து சுயதேவைகளுக்குக்கூட ஒரு துணை இல்லாமல் பழனிச்சாமிக்குத் தனியாக நடக்க முடிவதில்லை. 

பழனிசாமி

பழனிச்சாமியின் இரண்டு கைகள், கழுத்து தாடை, பின் பக்க கழுத்து என்று மொத்தம் எட்டு கட்டிகள் வளர்ந்து தொங்குகின்றது. எத்தனையோ மருந்து மாத்திரைகள் கொடுத்தும் பழனிச்சாமியைக் குணமாக்க முடிவில்லை. ஒரு கட்டத்தில் கட்டிகளை நீக்கிவிடலாம் என்று முடிவு செய்தபோது, கட்டிகளை நீக்கினால் கட்டிகளுக்குச் செல்லும் ரத்தம் உடலில் பரவினால் உடலில் கட்டிகள் உருவாக வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்யவே கட்டிகளை அகற்றுவதை நிறுத்திவிட்டனர். 

கட்டிகளை அகற்றவும் முடியாமல், குணப்படுத்த முடியாமல், கட்டிகள் நாளுக்கு நாள் வளர்ந்து கழுத்தில் வளர்ந்த கட்டி பழனிச்சாமியின் பேச்சுத்திறனை பாதித்துவிட்டது. தற்போது வயதான தன் தாய் ராஜம்மாளின் பராமரிப்பில் வாழ்ந்து வரும் பழனிச்சாமிக்கு தன் தாய்க்குப் பிறகு, எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று மாவட்ட நிர்வாகத்திடம் மருத்துவ உதவி கேட்டு மனுசெய்தார். `ஆனால், மாவட்ட நிர்வாகம் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை' என்கின்றார் பழனிச்சாமி. 

''என் உடலில் உள்ள கட்டிகளை அகற்ற தமிழக அரசு மருத்துவ உதவி செய்தால் போதும். வேறு உதவிகள் எனக்குத் தேவையில்லை'' என்று பழனிச்சாமி அரசுக்குக் கோரிக்கை வைக்கின்றார். தமிழக அரசின் கனிவான பார்வை பழனிச்சாமி மீது திரும்புமா?