வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (20/04/2018)

கடைசி தொடர்பு:19:20 (20/04/2018)

``எஸ்.வி.சேகரின் கேவலமான மனநிலையைப் பிரதிபலிக்கிறது!" - ஜோதிமணி காட்டம்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த ஃபேஸ்புக் பதிவுக்குக் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

 ஜோதிமணி

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்ததைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளருக்கு எதிராக ஒருவர் முகநூலில் போட்டிருந்த பதிவை ஷேர் செய்திருந்த எஸ்.வி.சேகருக்கு எதிராகக் கண்டன குரல்கள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. 

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆளுநர், சந்திப்பு முடிந்ததும் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தை தட்டினார். இதுவும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்த, சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர். இந்நிலையில், அந்தப் பெண் நிருபருக்கும், ஊடகங்களுக்கும் எதிரான ஃபேஸ்புக் பதிவை எஸ்.வி.சேகர் ஷேர் செய்தார். சமூக வலைதளங்களில் அந்தப் பதிவு பிரபலமானது. இதைக் கண்டித்து பல்வேறு தரப்பும் பேச, காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியும், தனது கடும் கண்டனங்களை எஸ்.வி.சேகருக்கு தெரிவித்துள்ளார்.

அதில்,``பல்வேறு இடையூறுகள், சிரமங்களுக்கிடையே பொதுவெளியில் துணிச்சலோடும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டு வரும் பெண்களை, வக்கிரமான மனநிலையோடு விமர்சிப்பதன் மூலம் அவர்களைப் பொதுவெளியிலிருந்து விரட்டிவிட முடியும் என்பது ஒரு கற்கால மனோபாவம். பெரியாரின், பாரதியின் வழித்தோன்றல்களாய் வலம்வரும் இன்றைய பெண்கள், நேர்மை, துணிச்சல், சுய கௌரவம் ஆகிய ஆயுதம் தரித்தவர்கள். பெண்கள் பற்றிய ஆர்.எஸ்.எஸ் / பி.ஜே.பி-யின் கற்கால பிற்போக்குச் சிந்தனைகளைக் காலில் மிதித்துக் கடப்பவர்கள். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று நிற்பவர்கள். குறிப்பாக, மோடியின் மக்கள் விரோத, எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக ஊடகங்களில் எழும் ஆபூர்வமான குரல், பெரும்பாலும் பெண் பத்திரிகையாளர்களுடையதாக இருக்கிறது. இதுதான் இவர்களை உறுத்துகிறது.

ஹெச்.ராஜாவும் தொடர்ந்து இதேபோல பேசி வருகிறார். இவர்களை பி.ஜே.பி தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இது பி.ஜே.பி-யின் திட்டமிட்ட ஆயுதம். இந்த ஆபாசத் தாக்குதலை என்போன்ற எத்தனையோ பேர் (ஆண்கள் உள்பட) கடந்த 4 ஆண்டுகளாக எதிர்க்கொண்டு வருகிறோம். இதற்கெல்லாம் அஞ்சுகிற பெண்கள், இங்கு யாரும் இல்லை. நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், நேர்மைத் திறமுமே இங்கு பெண்களின் அடையாளம். ஊடகவியலாளர் தோழிகளே உங்களோடு நாங்கள் துணை நிற்போம். இந்த மனநிலை பிறழ்ந்த பேச்சுகளை வேரறுப்போம். தொடரட்டும் உங்கள் போர்க்குணம்" என்று தெரிவித்துள்ளார்.